கோபன்ஹேகன்: ஓமிக்ரான் உருமாறிய கிருமி, கொவிட்-19 தொற்றுநோயை ஒரு புதிய கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் அது ஐரோப்பாவில் கிருமித்தொற்றை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் சொன்னார்.
மார்ச் மாதத்திற்குள் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டு ஐரோப்பியர்கள் ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.
ஐரோப்பாவில் தற்போதைய ஓமிக்ரான் அலை குறைந்த பிறகு, "அங்குள்ளவர்களுக்குச் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு நோய்எதிர்ப்புத் திறன் நீடிக்கும்.
"இவ்வாண்டின் இறுதியில் கிருமிப் பரவலின் அடுத்த அலை தொடங்கக்கூடும். ஆனால், அது மீண்டும் கொள்ளைநோயாக இருக்க வாய்ப்பில்லை.
"அதற்கு முன்னர், ஐரோப்பாவில் சில மாதங்களுக்கு கிருமித்தொற்று சம்பவங்கள் இல்லாமல் அமைதி நிலவும் என எதிர்பார்க்கிறோம்," என்றார் க்ளூக்.
அமெரிக்க தலைமை மருத்துவர் ஆன்டனி பவுசியும் இதேபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
ஏபிசி நியூஸ் டாக்கிற்கு அவர் அளித்த பேட்டியில், அமெரிக்காவின் பல மாநிலங்களில் தொற்றுச் சம்பவங்கள் பெருமளவில் குறைந்து வருகின்றன. இது தொடர்ந்து குறைந்தால், நாடு முழுவதும் பெரும் மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்," என்றார்.
ஓமிக்ரான் கிருமி குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறியது, கொள்ளைநோய் என்ற நிலையில் இருந்து, பருவகால காய்ச்சல் போன்ற நிரந்தர நோயாக கொவிட்-19 மாறத் தொடங்குகிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
ஆனால், கொவிட்-19 கிருமித்தொற்று நிரந்தர நோயாக மாறிவிட்டதாக இப்போதே கருதிவிடக்கூடாது என்றும் க்ளூக் எச்சரித்தார்.

