சிங்கப்பூரின் செய்லர்ஸ் குழுவில் பிரேசில் வீரர் ஹென்றிக்
சிங்கப்பூர்: ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் முதல்முறைாக விளையாடவுள்ள சிங்கப்பூரின் லயன்ஸ் சிட்டி செய்லர்ஸ் குழு பிரேசிலின் மத்திய திடல் வீரரான 29 வயது பெட்ரோ ஹென்றிக்கை 2 மில்லியன் வெள்ளிக்கு வாங்கியுள்ளது.
மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் செய்லர்ஸ் குழுவில் இணைந்துள்ள இவர், 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை விட்டோரியா குய்மரேஸ் குழுவிற்காக விளையாடினார். அக்குழுவிற்காக 2018ஆம் ஆண்டு யூரோப்பா லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார். அப்போது ஸல்ஸ்பர்க் குழுவிற்கு எதிராக ஹென்றிக் ஒரு கோல் போட்டார்.
விடாமல் துரத்தும் லிவர்பூல், செல்சி
லண்டன்: டோட்டன்ஹம் காற்பந்துக் குழுவை வீழ்த்திய செல்சியும் கிறிஸ்டல் பேலசை வீழ்த்திய லிவர்பூலும் இபிஎல் பட்டத்தை வெல்வதற்கான போட்டியில் மான்செஸ்டர் சிட்டியை விடாமல் துரத்துகின்றன.
டோட்டன்ஹமிற்கு எதிராக பிற்பாதி ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் போட்ட செல்சி 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது. மூன்று வாரங்களில் மூன்றாவது முறையாக டோட்டன்ஹம் குழுவை வீழ்த்தியுள்ளது செல்சி. இபிஎல் போட்டியில் டோட்டன்ஹம் குழுவின் முதல் தோல்வி இது.
கிறிஸ்டல் பேலசிற்கு எதிராக விளையாடிய லிவர்பூல், மூன்று கோல்கள் போட்டது. 55வது நிமிடத்தில் பேலஸ் ஒரு கோல் போட்டதால், 1-3 என்ற கோல்கணக்கில் வென்றது லிவர்பூல். சவுத்ஹேம்டனுடன் சிட்டி சமநிலை கண்டதைத் தொடர்ந்து லிவர்பூலின் இந்த வெற்றி முதல் இடத்திற்கான புள்ளி இடைவெளியை ஒன்பதாக குறைத்துள்ளது.
'போராடி தோற்றது ஏமாற்றமளிக்கிறது'
லண்டன்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக போராடி தோற்றது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் கூறியிருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்று 'ஒயிட் வாஷ்' ஆனது. கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 287 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி கடுமையாக போராடி 4 ஓட்டங்களில் தோற்றது. 49.2 ஓவர்களில் 283 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
"தீபக் சாஹரின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. நாங்கள் சரியான திசையை நோக்கி அடிக்கவில்லை," என்றார் அணித் தலைவர் ராகுல்.

