கிருமிப் பரவலுக்கு மத்தியில் வாழ தயாராகும் மலேசியா, தாய்லாந்து

கிருமிப் பரவலுக்கு மத்தியில் வாழ தயாராகும் மலேசியா, தாய்லாந்து

2 mins read
0600c625-8453-4303-a27b-e3afe9a504b0
-

கோலாலம்பூர்: தாய்லாந்தும் மலேசியாவும் கிருமிப் பரவலுக்கு மத்தியில் வாழ தயாராகி வருகின்றன.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின்போது இவ்வாண்டு மலேசியாவில் எந்தவித நடமாட்டக் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படாது என்று அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சொன் னார்.

கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தால், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடமாட்டக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்றும் பிரதமர் சொன்னதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.

அத்துடன் பொருளாதார, சமூகத் துறைகள், மாநிலங்களுக்கு இடையேயான பயணங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

கடந்த சில நாட்களாக மலேசியாவில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நோன்புப் பெருநாளுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் போகுமோ என்ற யூகங்கள் மக்களிடையே எழுந்தன.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் இஸ்மாயில், "கவலைவேண்டாம். மீண்டும் நாடு தழுவிய நடமாட்டக் கட்டுப்பாடு கொண்டு வரப்படாது," என்றார்.

தாய்லாந்தில் 4வது தடுப்பூசி

இதற்கிடையே, தாய்லாந்து அடுத்த மாதம் முதல் அனைத்துலக எல்லையைத் திறக்க தயாராகி வருவதால், சுற்றுலாப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19க்கு எதிராக நான்காவது தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

பேங்காக், புக்கெட், கிராபி உள்ளிட்ட ஏழு நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு நான்காவது தடுப்பூசி போடப்படுகிறது.

குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பு மூன்றாவது தடுப்பூசி போட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனிகா, ஃபைசர் தடுப்பூசிகள் போடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

சுகாதார ஊழியர்கள், எளிதில் தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்கள் என தாய்லாந்தில் ஏற்கெனவே 800,000 பேருக்கு நான்காவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தல் இல்லாமல் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என தாய்லாந்து ஏற்கெனவே அறிவித்திருந்தது.