சிட்னி: ஆஸ்திரேலியாவில் நேற்று மீண்டும் அதிகமானோர் கிருமித்தொற்றுக்குப் பலியாகினர்.
ஓமிக்ரான் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் 58 பேரும் நேற்று 56 பேரும் பலியாகினர்.
புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் சற்று குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அடுத்த வாரம் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படும்போது புதிய தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நேற்று அங்கு நான்கு மாநிலங்களைத் தவிர மற்ற இடங்களில் 37,754 பேரைக் கிருமி தொற்றியது.
இது இம்மாதத் தொடக்கத்தில் பதிவானதைவிட மூன்று மடங்கு குறைவாகும்.
சீனப் புத்தாண்டு கொண்டாட்ட வேளையில், தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை ஹாங்காங் குறைக்கவுள்ளது.
அத்துடன் சில பொதுச் சேவைகளைத் தற்காலிகமாக குறைக்க வேண்டியிருக்கும் என்றும் ஹாங்காங் கூறியுள்ளது.
இதற்கிடையே, சீனாவில் காய்ச்சலுக்கு மருந்து வாங்கும் அனைவரும் கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சீனாவின் பெய்ஜிங் கூறியுள்ளது. மருந்து வாங்கியவர் அடுத்த 72 மணி நேரத்திற்குள் தொற்று பரிசோதனை செய்துகொள்ளவில்லை என்றால் அவருக்கு எங்கும் செல்ல முடியாத கட்டுப்பாடு விதிக்கப்படும்.

