செவியா செல்லும் மார்சியால்
மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுைனடெட் தாக்குதல் ஆட்டக்காரர் ஆண்டனி மார்சியால், ஸ்பெயினின் செவியா குழுவுக்கு சென்றுள்ளார். இந்தக் காற்பந்துப் பருவத்தின் எஞ்சிய காலம் முழுவதும் அவர் செவியாவுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் குழுவில் விளையாட வாய்ப்புக் கிடைக்காமல் தவித்த மார்சியால் யுனைடெட்டிலிருந்து செல்ல விரும்புவதாக கடந்த டிசம்பர் மாதம் கூறியிருந்தார்.
பின்னர் மான்செஸ்டர் யுனைடெட்டில் தற்காலிக நிர்வாகியாக இருக்கும் ரால்ஃப் ரானிக்குடன் கருத்து வேறுபாடு கொண்ட நிலையில் அவர் ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட விரும்பவில்லை என்று தெரிவித்ததாக ரானிக் கூறியிருந்தார். இதை மார்சியால் மறுக்க தற்பொழுது மார்சியால் தனது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு செவியா சென்றுள்ளார்.
இவரை தனது குழுவில் இணைத்துக்கொள்ள இத்தாலியின் ஜுவென்டஸ் குழுவும் போட்டி போட இறுதியில் செவியாவுக்கு இவரது சேவை கிட்டியது.
செவியா ஸ்பெயினின் லா லீகா காற்பந்து தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் ரியால் மட்ரிட்டுக்கு அடுத்து இரண்டாம் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹாட்சன் வாட்ஃபர்டின் புதிய நிர்வாகி
லண்டன்: முன்னாள் இங்கிலாந்து காற்பந்து நிர்வாகியான ராய் ஹாட்சன் வாட்ஃபர்டின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை நேற்று அறிவித்த வாட்ஃபர்ட் காற்பந்துக் குழு, ராய் ஹாட்சனை நிர்வாகியாக நியமிப்பதில் தாங்கள் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தது.
"முன்னாள் இங்கிலாந்து குழுவின் நிர்வாகியான ராய் ஹாட்சனும் அவரது உதவியாளரான ரே லிவிங்டனும் 2002ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டுவரை வாட்ஃபர்ட்டை மிக அற்புதமாக வழிநடத்திச் சென்றனர்.
"இங்கிலாந்து குழுவை 2012, 2016ஆம் ஆண்டுகள் ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டி, 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கு இட்டுச் சென்று புகழ் சேர்த்தார்.
"அத்துடன், இங்கிலாந்தில் பல்வேறு குழுக்களை நிர்வகித்த பரந்த அனுபவமும் ஹாட்சனுக்கு உள்ளது," என்று வாட்ஃபர்ட் குழு தனது அறிக்கையில் ஹாட்சனுக்கு புகழாரம் சூட்டி அவரை நிர்வாகியாக நியமித்துள்ளது.
மீண்டும் விளையாட வரும் எரிக்சன்
ஹேக்: சென்ற ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலரையும் கலக்கத்தில் ஆழ்த்திய டென்மார்க் ஆட்டக்காரர் கிறிஸ்டியன் எரிக்சன் தற்பொழுது மீண்டும் காற்பந்து விளையாட ஆயத்தமாகி வருகிறார்.
ஹாலந்து நாட்டின் அயக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவின் இரண்டாம் நிலைக் குழுவான யோங் அயக்ஸ் குழுவில் இணைந்து தமது காற்பந்து பயிற்சியை தொடங்கியுள்ளார் கிறிஸ்டியன் எரிக்சன்.
இவருக்கு இதய 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது.

