யங்கூன்: மியன்மார் ராணுவ ஆட்சி மன்றத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பினால் அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு பாயும் என்று மியன்மார் ராணுவம் எச்சரித்துள்ளது.
மியன்மார் ராணுவம் புரட்சியின் மூலம் ஆட்சியை சென்ற ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி கைப்பற்றிய ஆண்டு நிறைவு நெருங்கிவரும் நிலையில் ராணுவ ஆட்சி மன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது நினைவுகூரத்தக்கது.
மியன்மார் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அந்நாட்டு பொருளியல் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ராணுவப் புரட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் பொதுமக்களில் குைறந்தது 1,500 பேர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவப் புரட்சி நடந்து ஓராண்டு ஆகியும் ராணுவத்தால் மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆங்காங்கே மக்கள், தற்காப்புப் படை என்ற அமைப்பு ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல்கள் அண்மைய காலமாக அதிகரித்து வருவதாகவும் செய்தித் தகவல்கள் கூறுகின்றன. மக்கள் தற்காப்பு படை மற்றும் ஆங் சான் சூச்சி அம்மையாரின் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேசிய ஒற்றுமை அரசாங்கம் என்ற அமைப்பு ஆகியவற்றுக்கு ராணுவம் தடை விதித்துள்ளது.
இதன் தொடர்பில் ராணுவம் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், மக்கள் தற்காப்புப் படையும் தேசிய ஒற்றுமை அரசாங்க அமைப்பும் பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பியும் அமைதி வழியில் வேலைநிறுத்தம் செய்தும் நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைப்பதாக கூறியது.
ஆகையால், ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீதும் ராணுவத்துக்கு எதிராக பிரசாரம் செய்வோர் மீதும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என்று ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

