காற்பந்து செய்திகள்

காற்பந்து செய்திகள்

2 mins read
32c5c80f-316b-4ce4-a064-155fd2134ab9
-

வெற்றி கோலை அடித்த சாலா

துவாலா: ஆப்பிரிக்க கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் எகிப்தின் தாக்குதல் ஆட்டக்காரரும் லிவர்பூல் அணிக்கு விளையாடுபவருமான முகமது சாலா எகிப்து நாட்டின் கடைசி பெனால்டி வாய்ப்பை கோலாக்கி ஐவரி கோஸ்ட் நாட்டை தமது நாடு 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற உதவியுள்ளார்.

இதைத் தொடர்ந்து காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது எகிப்து. எகிப்துக்காக சாலா கோல் போட ஐவரி கோஸ்ட் நாட்டின் கடைசி பெனால்டி வாய்ப்பை கோலாக்க முடியாமல் தவித்தார் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைெடட் குழுவில் விளையாடும் எரிக் பாயி.

கேமரூன் நாட்டின் துவாலா நகரில் ஜபோமா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டம் இழுபறியாக இருந்ததாகவும் ஆட்டம் போகும் போக்கைப் பார்த்ததில் எகிப்து தோற்றுவிடுமோ என எண்ணத் தோன்றியதாகவும் ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது.

எனினும், இறுதியில் இதற்கு முந்தைய ஆட்டங்களில் வெறும் இரண்டு கோல்கள் மட்டுமே போட்ட எகிப்து பெனால்டி வாய்ப்புகளை சரிவரப் பயன்படுத்திக்கொண்டதால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

நான்கு வீரர்களுக்கு தொற்று இருந்தால் ஆட்டம் ஒத்திவைப்பு

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்கள் தங்கள் குழுவில் குறைந்தது நான்கு விளையாட்டாளர்களுக்கு கொவிட்-19 தொற்று பாதிப்பு இருந்தால் மட்டுமே அவை தாங்கள் விளையாட வேண்டிய ஆட்டங்களை ஒத்திவைக்குமாறு கோரலாம் என்று பிரிமியர் லீக் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

கொவிட்-19 தொற்று பாதிப்பினால் இதுவரை 22 ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பிரிமியர் லீக்கின் 20 குழுக்களின் பிரதிநிகளுடன் லீக் நிர்வாகம் புதன்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்தியபின் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.

முன்னதாக, ஒரு குழுவில், 21 வயதுக்குட்பட்ட மாற்று ஆட்டக்காரர்கள் உள்பட, விளையாடக்கூடிய தகுதியில் 13 ஆட்டக்காரர்களும் ஒரு கோல்காப்பாளரும் இல்லை என்றால் மட்டுமே அந்தக் குழு தனது ஆட்டங்களை ஒத்திவைக்குமாறு கோரலாம் என்ற நிலை இருந்தது.

கொவிட்-19 தொற்றால் காற்பந்துக் குழுக்களை சேர்ந்த பல வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரிமியர் லீக் நிர்வாகம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.