ஜகார்த்தா: கொவிட்-19 கிருமிப் பரவலின் மூன்றாவது அலை இந்தோனீசியாவை ஆட்டிப் படைக்கத் தொடங்கியுள்ளது.
தொற்றியவர்கள் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரும் அதிகரித்து வருவதற்கு ஓமிக்ரான் கிருமிப் பரவலே காரணமாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ஆக அதிகமாக நேற்று 8,077 பேர் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர்.
ஓமிக்ரானால் தொற்றுக்கு ஆளானவருக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறினாலும், கிருமி தொற்றியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால் மருத்துவமனைகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜகார்த்தாவில் ஜனவரி 3ஆம் தேதி மருத்துவமனை படுக்கைகள் 8 விழுக்காடு நிரம்பியிருந்தது. தற்போது அது 38 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் இணையத்தளம் கூறுகிறது.
நாடு முழுவதற்குமான இந்த சராசரி 10 விழுக்காடாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 18ஆம் தேதிக்கும் சென்ற புதன்கிழமைக்கும் இடைப்பட்ட நாள்களில் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் நேற்று 98 பேர் கிருமித்தொற்று காரணமாக மாண்டுவிட்டனர். கிருமிப் பரவல் குறையத் தொடங்கியுள்ளது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் சரிவை ஏற்படுத்தும் என்று பல மாநிலங்கள் எதிர்பார்க்கின்றன.
நேற்று அங்கு 40,000 பேரைக் கிருமி தொற்றியது. இது சென்ற ஒரு மாதத்தில் பதிவான குறைவான எண்ணிக்கையாகும்.
ஹாங்காங் செல்லும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நாள்கள் 21லிருந்து 14 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றார் ஹாங்காங் நிர்வாகி கேரி லாம்.
இந்த தளர்வு நடைமுறை எந்த நாடுகளில் இருந்து செல்லும் பயணிகளுக்குப் பொருந்தும் என்பதை அவர் சொல்லவில்லை.
தென்கொரியா தற்காலிகமாக நூற்றுக்கணக்கான சிறிய மருத்துவமனைகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து நான்காவது நாளாக அங்கு தொற்று சம்பவங்கள் நேற்றும் (16,096) புதிய உச்சத்தைத் தொட்டன.

