லண்டன்: கொள்ளைநோய் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது என்று சென்ற வாரம் உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய தலைவர் நம்பிக்கை தெரிவித்திருந்ததற்கு மத்தியில் அவ்வாறு நினைப்பது ஆபத்தானது என்று அந்நிறுவனத்தின் உயர்மட்ட தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஐரோப்பிய தலைவர் க்ளூக் அவ்வாறு கூறியதையடுத்து, பேசிய நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரேஸ் அதனாம் கேபிரியசுஸ், "கொள்ளைநோய் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதாக எண்ணுவது ஆபத்தானது," என்று எச்சரித்தார். அதேசமயம் உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய கிளையும் "கொள்ளைநோய் இன்னும் முடியவில்லை," என்று கூறியுள்ளது.
உருமாறிய கிருமிகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல், உலகளாவிய தடுப்பூசி விகிதம் ஆகியவற்றின் காரணமாக கொள்ளைநோய் இறுதிக் கட்டத்திற்கு வரவில்லை என்கிறது அறிவியல் உலகம்.
மற்றொருபுறம், சென்ற இரண்டு ஆண்டுகளாக பொருளாதாரத்தை முடக்கிய தொற்றுநோயை மற்ற நோய்களைப் போன்று கையாள அரசியல் தலைவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், "கொள்ளைநோய் கட்டத்தைக் கடந்து, அதை நிரந்தர நோயாகக் கையாளும் காலத்தை நோக்கிச் செல்கிறோம்," என்றார்.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் உலகளாவிய சுகாதார தொற்றுநோயியல் நிபுணரான பேராசிரியர் டிம் கோல்போர்ன், "நிரந்தர நோய் என்பது கிருமியின் தீவிரம் குறைவது அல்ல. நிரந்தர நோய்க் காலம் என்பது தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்காமல், நிலையான எண்ணிக்கையில் இருப்பதே நிரந்தர நோயாகும்," என்று கூறினார்.
"நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறும் வரை நிரந்தரநோயாக கையாளும் காலம் வந்துவிட்டதாக கூறமுடியாது," என்றார் லியூவன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மார்க் வான் ரான்ஸ்ட்.
நிரந்தர நோய் என்றால் அது அது கொடியதாக இருக்காது என்று அர்த்தமல்ல என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். காசநோய், மலேரியா, எச்ஐவி ஆகிய நோய்களால் மில்லியன்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதையும் அவர்கள் சுட்டினர்.

