செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d698c582-40b1-428f-a407-39ffa50d08ae
-

குறைந்து வரும் ர‌ஷ்ய மக்கள்தொகை

மாஸ்கோ: ர‌ஷ்யாவின் மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்நாடு சென்ற ஆண்டில் மட்டும் ஒரு மில்லியன் பேரை இழந்துள்ளதாக புள்ளிவிவர நிறுவனமான ரோஸ்டாட் கூறுகிறது.

ர‌ஷ்யாவின் வரலாற்றில் இந்த அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது. 660,000 பேர் கிருமித்தொற்றால் மாண்டுவிட்டதும் மக்கள்தொகையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2020ஆம் ஆண்டிலும் அதன் மக்கள்தொகை அரை மில்லியனுக்கும் அதிகமாகக் குறைந்தது.

எண்ணெய்க் கசிவால் பேரழிவு

பேங்காக்: எண்ணெய்க் கசிவு காரணமாக தாய்லாந்தின் கிழக்குக் கடற்கரை பகுதி பேரழிவுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து வளைகுடாவில் நீருக்கடியில் உள்ள எண்ணெய்க் குழாயில் சென்ற செவ்வாய்க்கிழமை முதல் எண்ணெய் கசியத் தொடங்கியது.

கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் பரப்பளவில், 50,000 லிட்டர் எண்ணெய்க் கசிந்திருக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டது.இந்நிலையில், கடலில் கசிந்த எண்ணெய் ரேயாங் மாநிலத்தில் உள்ள மே ராம்புவேங் கடற்கரையோரத்தில் படிந்துள்ளது. எண்ணெய் நிறுவனத்தின்

150 ஊழியர்களும் 200 கடற்படை வீரர்களும் கடற்கரையைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாராக இருந்தாலும் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும்: ஆஸ்திரேலியா

சிட்னி: அமெரிக்க ஹிப்ஹாப் கலைஞர் கான்யே வெஸ்ட் ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்குத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டாரா என்பது குறித்த தெளிவான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், "யாராக இருந்தாலும் ஆஸ்திரேலிய விதிமுறைகளின்படி தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும். கான்யே ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்றால் அவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும்," என்றார்.

'வெள்ளெலிகளிடம் இருந்து கிருமித்தொற்று பரவும் சாத்தியம்'

ஹாங்காங்: செல்லப்பிராணியான வெள்ளெலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று பரவக்கூடும் சாத்தியம் உள்ளதற்கான ஆதாரத்தை ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தி லான்செட்டில் இதற்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களை ஹாங்காங் சமர்ப்பித்துள்ளது. அவை மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

மேலும் இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குக் கிருமித்தொற்று பரவும் சாத்தியம் உள்ளதைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. ஹாங்காங்கில் வெள்ளெலிகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால், 2,000 வெள்ளெலிகள் கொல்லப்பட்டன.