ஒட்டாவா: பாதுகாப்பு காரணங்களுக்காக கனடியப் பிரதமர் ஜஸ்டின் டுருடோ குடும்பத்துடன் தலைநகர் ஒட்டவாவில் இருந்து வெளியேறி உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கனடா எல்லையைக் கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என கனடியப் பிரதமர் ஜஸ்டின் டுருடோ அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.
கடந்த இரண்டு நாள்களாக ஓட்டுநர்கள் தங்கள் லாரியோடு ஒட்டவாவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே குவிந்து வருகின்றனர்.
உறைய வைக்கும் மைனஸ் 21 டிகிரி செல்சியஸ் கடுங்குளிரிலும் கிட்டத்தட்ட 2,700 லாரிகள் அந்த இடத்திற்கு வந்தடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, ஆர்ப்பாட்டம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்ட சில வன்முறை வார்த்தைகள், போலிசார் மத்தியில் நகரின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளன.
எனவே ஒட்டவாவில் இருந்து தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ள கனடியப் பிரதமர் ஜஸ்டின் டுருடோ பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சிபிசி செய்தி கூறுகிறது.
பிரதமர் அலுவலகம் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

