விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
736e154e-7fc2-4fd8-9cc3-9c37d91e7e3e
-

மீண்டும் பார்சிலோனாவிற்கே சென்றார் அடாமா டிரையோரே

பார்சிலோனா: இபிஎல் காற்பந்துப் போட்டியில் விளையாடும் உல்வ்ஸ் குழு வீரரான அடாமா டிரையோரே கடனாக வாங்கியுள்ளது பார்சிலோனா. ஒப்பந்தத்தின்படி, இப்பருவம் முடியும் வரை அவர் பார்சிலோனாவுக்காக விளையாடுவார்.

இதனால், தனது காற்பந்துக் கனவு தொடங்கிய பார்சிலோனாவுக்கே டிரையோரே மீண்டும் திரும்பியுள்ளார். இப்பருவத்தின் இறுதியில் பார்சிலோனா அவரை நிரந்தரமாக வாங்கிக்கொள்வதற்கான வாய்ப்பு குறித்தும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதிப் பிரச்சினையால் அதிக விலை கொடுத்து மிகவும் பிரபலமான ஆட்டக்காரர்களை வாங்கமுடியாமல் தடுமாறி பார்சிலோனா, டிரையோரேயும் தற்போது கடனாகவே வாங்கியுள்ளது. டிரையோரே வாங்குவதற்கு இபிஎல்லின் இன்னோர் குழுவான டோட்டன்ஹம் குழுவும் முட்டி மோதியது.

லிவர்பூலில் கொலம்பிய வீரர்

லண்டன்: போர்ச்சுக்கீசிய காற்பந்துக் குழுவான போர்ட்டோவிற்காக விளையாடி வந்த கொலம்பிய வீரர் லூயிஸ் டியாஸை 37.5 மில்லியன் யூரோவிற்கு

(68 மில்லியன் வெள்ளி) லிவர்பூல் குழு வாங்கியுள்ளது. அத்துடன் 12.5 மில்லியன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தின்படி 2027ஆம் ஆண்டு வரை டியாஸ், லிவர்பூல் குழுவில் நீடிப்பார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக போர்ட்டோ குழுவிற்காக 125 ஆட்டங்களில் விளையாடிய டியாஸ், 41 கோல்கள் போட்டுள்ளார். லிவர்பூலின் நட்சத்திர வீரரான முகமது சாலாவின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இளையர் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் இந்திய அணி

ஆன்டிகுவா: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் பங்ளாதே‌ஷை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

முதலில் பந்தடித்த பங்ளாதே‌ஷ், இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 37.1 ஓவர்களில்

111 ஓட்டங்களுக்கு பங்ளாதே‌ஷ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீரர்கள் ரவிகுமார்

3 விக்கெட்டுகளையும் விக்கி ஆஸ்ட்வால்

2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து பந்தடித்த இந்திய அணி 30 ஓவர்களில்

5 விக்கெட்டு இழப்புக்கு 117 ஓட்டங்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் அங்கிரி‌ஷ் ரகுவன்‌ஷி 44 ஓட்டங்கள் சேர்த்தார். வரும் 2ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.