லண்டன்: உக்ரேன் விவகாரத்தில் அதிகரித்து வரும் ரஷ்யாவின் விரோதப்போக்கிற்கு மத்தியில், கிழக்கு ஐரோப்பாவில் உள்ள தனது பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க பிரிட்டன் திட்டமிட்டு வருகிறது.
இதற்காக படை வீரர்கள், ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், ஜெட் விமானங்கள் ஆகியவற்றை நேட்டோவிற்கு அனுப்ப பிரிட்டன் தயாராகி வருவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து
உள்ளார்.
இதையடுத்து, கிழக்கு ஐரோப்பாவில் தற்போது உள்ள 1,150 பிரிட்டிஷ் துருப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்.
இந்த நடவடிக்கை ரஷ்யாவிற்குத் தெளிவானதொரு செய்தியை அனுப்பும் எனவும் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
"ரஷ்யாவின் விரோதப்போக்கை எதிர்கொள்வதில் நாங்கள் எப்போதும் நேட்டோ நட்பு நாடுகளுக்குத் துணை நிற்போம்," என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, ரஷ்யப் படை குவிப்பால், ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் ஜான்சன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் அவர் கிழக்கு ஐரோப்பாவிற்குச் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன் இருநாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவுச் செயலாளர்கள் மாஸ்கோவில் சந்திக்கவுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யா மீதான பொருளாதார தடைகளைக் கடுமையாக்குவது குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இன்று அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேட்டோ நட்பு நாடுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யும் வகையில், அமெரிக்காவும் கிழக்கு ஐரோப்பாவிற்கு அதிக துருப்புகளை அனுப்புவதாக சென்ற வாரம் கூறியது.
ரஷ்யா, அடுத்த மாதம் உக்ரேன் மீது படையெடுக்கக்கூடும் என்று எச்சரித்துள்ள அமெரிக்கா, அதனால் கொடூரமான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் கூறியுள்ளது.
உக்ரேன் எல்லையில் படைகள், ஆயுதங்களை மட்டுமல்லாமல், ரஷ்யப் ரத்த வங்கிகளையும் மருத்துவ சாதனங்களையும் தயார்நிலையில் வைத்துள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது போருக்கு ரஷ்யா தயாராக உள்ளதைக் காட்டுவதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால், உக்ரேன் மீது போர்தொடுக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

