ஹுவாசோங் ஏவுகணை சோதிக்கப்பட்டதாக வடகொரியா உறுதி
வாஷிங்டன்: நடுத்தர தொலைவு சென்று இலக்குகளைத் தாக்கி அழிக்கக்கூடிய ஹுவாசோங்-12 எனும் ஏவுகணையை சோதித்ததாக வடகொரியாவின் கேசிஎன்ஏ ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
இதுபோன்றதொரு ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளதாக தென்கொரியாவும் ஜப்பானும் நேற்று முன்தினம் கூறியிருந்தன. இந்த ஏவுகணை 2,000 கி.மீ. உயரம் சென்று பிறகு ஜப்பான் கடலில் இறங்கியதாகவும் தென்கொரியா சொன்னது.
2017ஆம் ஆண்டிற்குப் பிறகு, வடகொரிய மேற்கொண்ட மிகப் பெரிய சோதனை இதுவென்றும் அவை கூறின.
இந்நிலையில், ஏவுகணை ஏவப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களையும் ஏவுகணை விண்வெளியில் இருக்கும்போது எடுக்கப்பட்ட படங்களையும் வடகொரியா நேற்று வெளியிட்டது.
ஹுவாசோங்-12 ஏவுகணை துல்லியமான செயல்திறனை உறுதி செய்வதற்காக இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கேசிஎன்ஏ கூறியது.
ஹுவாசோங்-12 ஏவுகணை பெரிய அளவிலான அணுவாயுதங்களை ஏந்திச்செல்லக்கூடியது என்று வடகொரியா முன்பு கூறியது.
இந்நிலையில், அணுவாயுதம், ஏவுகணை திட்டங்கள் குறித்த எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல் அமெரிக்கா, வடகொரியாவை நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
"முக்கிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதே சரியானதாக இருக்கும் என நம்புகிறோம்.
"இருதரப்பு பிரச்சினைகளையும் சரி செய்யக்கூடிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்," என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார்.
தொலைதூர ஏவுகணையையும் வடகொரியா சோதனை செய்யக்கூடும் என்று கவலைப்படுவதாகவும் அவர் சொன்னார்.

