21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்: நடாலுக்கு ஜோக்கோவிச், ஃபெடரர் வாழ்த்து
21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபாயல் நடால். படம்: இபிஏ
சிட்னி: ஆஸ்திரேலிய பொதுவிருது டென்னிஸ் தொடரை போராடி வென்ற ஸ்பெயின் வீரர் ரஃபாயல் நடாலுக்கு சக வீரர்களான ஜோக்கோவிச்சும் ஃபெடரரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இவர்கள் மூவரும் ஏற்கெனவே
20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தனர். ஆனால், காயம் காரணமாக ஃபெடரரும் தடுப்பூசி விதிவிலக்கு சர்ச்சை காரணமாக ஜோக்கோவிச்சும் இப்போட்டியில் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளிலும் பின்தங்கிய நடால், வெற்றியைத் தனதாக்க அடுத்தடுத்த சுற்றுகளில் கடுமையாகப் போராடினார். 5 மணி நேரம் 24 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற ஆட்டக் கணக்கில் ரஷ்ய வீரர் மெட்வெடவ்வை வீழ்த்தினார் நடால்.
ஆஸ்திரேலிய பொதுவிருதை இரண்டாவது முறையாக வென்ற பிறகு பேசிய நடால், இந்த வெற்றி தனக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாகச் சொன்னார்.
சோல்ஷியார் விளையாடிய மேன்யூ காற்பந்து குழுவில் மகள் அறிமுகம்
லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் முன்னாள் வீரரான சோல்ஷியாரின் மகள் கர்ணா சோல்ஷியார், யுனைடெட்டின் பெண்கள் குழுவில் நேற்று அறிமுகம் கண்டார். ஒரே காற்பந்துக் குழுவில் விளையாடிய தந்தை, மகள் என்ற பெருமை இவர்களையே சேரும்.
எஃப்ஏ கிண்ணக் காற்பந்துத் தொடரில் பிரிட்ஜ்வாட்டர் குழுவிற்கு எதிராக, 85வது நிமிடத்தில் மாற்று வீராங்கனையாக களமிறங்கினார் கர்ணா சோல்ஷியார். மேன்யூ குழுவில் 11 ஆண்டுகளாக விளையாடிய சோல்ஷியார் 126 கோல்கள் போட்டார். அக்குழுவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருந்த அவர், சென்ற நவம்பரில் அதிலிருந்து பதவி நீக்கப்பட்டார்.
பிரண்ட்ஃபர்ட் குழுவில் எரிக்சன்
லண்டன்: டோட்டன்ஹம் காற்பந்துக் குழுவின் முன்னாள் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் ஆறுமாத ஒப்பந்த அடிப்படையில் பிரண்ட்ஃபர்ட் குழுவில் இணைந்துள்ளார். சென்ற ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 'பேஸ்மேக்கர்' சாதனம் பொருத்தப்பட்டது.
அதன் பிறகு, 2020 முதல் விளையாடி வந்த இன்டர்மிலான் குழுவுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. குணமடைந்த அவர் தற்போது, டென்மார்க் அணிக்காக உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் விளையாட ஏதுவாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

