சிட்டி ஒன்றும் சிறந்த குழு கிடையாது: கார்டியோலா
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் மான்செஸ்டர் சிட்டி ஒன்றும் உலகின் சிறந்த காற்பந்துக் குழு கிடையாது என்று கூறியுள்ளார் அதன் நிர்வாகி பெப் கார்டியோலா.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரண்ஃபர்ட் குழுவை 2-0 என்ற கோல்கணக்கில் வென்று 12 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் உள்ளது சிட்டி.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய கார்டியோலா, "செல்சியும் பல்மிராஸ் குழுக்களும்தான் உலகின் சிறந்த காற்பந்துக் குழுக்கள்," என்றார்.
நாளை நடைபெறவுள்ள கிளப் உலகக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் செல்சி, பல்மிர்ாஸ் குழுக்கள் மோத உள்ளன. சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்லாததால், சிட்டி குழு இதுவரை கிளப் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்றதில்லை.
மற்றோர் ஆட்டத்தில், டோட்டன்ஹம் குழுவிற்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது சவுத்ஹேம்டன். சொந்த கோலால் பின்தங்கி, பிறகு மீண்டெழுந்த சவுத்ஹேம்டன் 2-3 என்ற கோல்கணக்கில் வென்றது.
பிரசித் கிருஷ்ணா அதிரடி; தொடரை வென்றது இந்தியா
அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை வென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. முதலில் பந்தடித்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ஓட்டங்கள் எடுத்தது.
குறைவான இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் இந்திய பந்துவீச்சைத் தாக்குப்பிடித்து நின்றனர். அதன்பின் பந்துவீசிய இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா தனது வேகத்தால் தொடக்க வீரர்களின் கூட்டணியை உடைத்தார்.
அதன்பின், நிலைகுலைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இறுதியில் 46 ஓவர்கள் முடிவில் 193 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய அணி. அதிரடி காட்டிய பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

