வாஷிங்டன்: போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், உக்ரேனிலிருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் பைடன் அறிவுறுத்தியுள்ளார்.
ஒருவேளை உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால், அங்குள்ள அமெரிக்கர்களை மீட்க ராணுவப் படைகள் அனுப்பப்படாது என்றார் அவர்.
வியாழக்கிழமை என்பிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அதிபர் பைடன், "உலகின் மிகப்பெரிய ராணுவப் படைகளில் ஒன்றை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இது மிகவும் மாறுபட்ட சூழலாகும். விரைவில் நிலைமை மோசமடையக் கூடும்.
"அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் சுடத் தொடங்கினால், அது உலகப் போராக இருக்கும்," என்றார் அவர்.
உக்ரேன், கிழக்கு ஐரோப்பிய எல்லைகளில் ரஷ்யா தனது ராணுவப் பலத்தை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், எந்தவொரு எச்சரிக்கையும் கொடுக்கப்படாமல் எப்போது வேண்டுமானாலும் ராணுவத் தாக்குதல் தொடங்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
சென்ற அக்டோபர் மாத நிலவரப்படி உக்ரேனில் ஏறத்தாழ 6,600 அமெரிக்கர்கள் வாழ்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, அடுத்த வாரம் கடற்படை பயிற்சிக்கு ரஷ்யா தயாராகி வரும் நிலையில், கடலுக்குச் செல்லும் பாதையை ரஷ்யா தடுப்பதாக உக்ரேன் எச்சரித்துள்ளது.
உக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, "அசோவ் கடல் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கருங்கடல் பகுதி, கிட்டத்தட்ட முழுமையாக ரஷ்யப் படைகளால் துண்டிக்கப்பட்டுள்ளது," என்றார்.

