சிட்னி: தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான நிலையைத் தக்கவைத்துக்கொள்ள ஆஸ்திரேலிய மக்கள் கட்டாயமாகக் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், வெளிநாட்டில் இருந்து செல்பவர்கள் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டிருந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது எல்லையை முழுமையாகத் திறக்க முடிவு செய்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்துள்ளது.
தடுப்பூசி ஆலோசனை குழுவின் புதிய வழிகாட்டுதல்களுக்கு அந்நாட்டு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இரண்டாவது தடுப்பூசி போடப்பட்ட ஆறு மாதங்களுக்குள் கூடுதல் தடுப்பூசி போடப்படவில்லை என்றால், அவர்களின் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான நிலை 'இன்னமும் போடப்படவில்லை' என்பதாக கருதப்படும் என்றார் ஆஸ்திரேலிய பிரதமர் போரிஸ் ஜான்சன்.
சில முன்கள ஊழியர்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலிய அதிகாரிகள் தடுப்பூசியைக் கட்டாயமாக்கியுள்ளனர். ஆனால், பெரு நிறுவனங்கள், உணவகங்கள், சில்லறை வர்த்தகங்கள் உள்ளிட்டவை தங்களின் வாடிக்கையாளர்களுக்குத் தடுப்பூசியைக் கட்டாயமாக்கியுள்ளன.
உலகிலேயே அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில், 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அங்கு இதுவரை 10 மில்லியன் கூடுதல் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

