தடுப்பூசித் திட்டத்துக்கு எதிராக தீவிரமடையும் ஆர்ப்பாட்டங்கள்
கேன்பரா: கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவிலும் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் வழக்கநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேன்பராவில் ஏறத்தாழ 10,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டதாகவும் அவர்களில் மூவர் கைது செய்யப்பட்டதாகவும் ஆஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
குலமரபுக் குழுக்களிடையே சண்டை; ஒன்பது பேர் மரணம்
மணிலா: தென்பிலிப்பீன்ஸில் முஸ்லிம் குலமரபுக் குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஒன்பது பேர் மாண்டனர். தாக்குதலில் மூவர் காயமுற்றனர். வரிசையாகச் சென்றுகொண்டிருந்த கார்களை நோக்கி துப்பாக்கிக்காரர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். இந்தக் கும்பல் மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று நிகழ்ந்தது.
காரில் சென்றுகொண்டிருந்தோரின் தலைவர் பெகேஸ் மமாசைன்கேட்டும் அவருடன் இருந்த எட்டு பேரும் மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.
மாண்டவர்களும் தாக்குதல் நடத்தியவர்களும் இதற்கு முன்பு முஸ்லிம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் பலவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் நார்வே
ஓஸ்லோ: எஞ்சியுள்ள கொவிட்-19 கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவற்றை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக நார்வே அறிவித்துள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அது நாட்டின் சுகாதாரத் துறைக்கு நெருக்குதலைத் தரும் சாத்தியம் மிகவும் குறைவு என்று அந்நாட்டுப் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோயேரே நேற்று கூறினார். இருப்பினும், சில கட்டுப்பாடுகள் தொடரும் என்றார் அவர். புதிய விதிமுறைகள் நார்வே நேரப்படி நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இம்மாதம் 1ஆம் தேதியன்று பெரும்பாலான கட்டுப்பாடுகளை நார்வே முடிவுக்குக் கொண்டு வந்தது.

