ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கடற்கரையில் தியானம் செய்துகொண்டிருந்தோரில் குறைந்தது 10 இந்தோனீசியர்கள் பேரலைகளில் சிக்கி மாண்டனர் என்று காவல்துறைதெரிவித்துள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் பின்னிரவில் நிகழ்ந்தது.
கிழக்கு ஜாவா மாநிலத்தில் உள்ள பயங்கான் கடற்கரையில் 23 பேர் அவரவர் கைகளைப் பிடித்துக்கொண்டு தியானத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கடலுக்கு அருகில் இருந்ததாகவும் பேரலைகள் கரையை நோக்கி வந்தபோது அவர்களால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்றும் காவல்துறையினர் கூறினர்.
ஆகக் கடைசி நிலவரப்படி 10 பேரின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 40 வயது ஆடவர் ஒருவரைக் காணவில்லை.
சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரு சடங்கில் ஈடுபட்டிருந்தனர். அச்சடங்கு குறித்த மேல்விவரங்கள் இல்லை. எனினும் சடங்கை வழிநடத்திய ஆன்மீக குரு உயிர் பிழைத்ததாகவும் அவரை விசாரிக்கப்போவதாகவும் காவல்துறை சொன்னது.

