அதிகரித்து வரும் விமானப் பயணங்கள்; பின்தங்கும் சிங்கப்பூர், ஹாங்காங்

அதிகரித்து வரும் விமானப் பயணங்கள்; பின்தங்கும் சிங்கப்பூர், ஹாங்காங்

2 mins read
59c55cab-828d-487d-a710-62a7925ac5a6
எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் விமானப் பயணத் துறை மீண்டும் வரைம் நிலையில் ஆசியப் பொருளியல்களில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக சுற்றுப்பயணத் துறை பெரும் பங்கு வகிக்கும் சிங்கப்பூரையும் ஹாங்காங்கையும்  பயணிகள் தவிர்த்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் விமானப் பயணத் துறை மீண்டும் வரைம் நிலையில் ஆசியப் பொருளியல்களில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சுற்றுப்பயணத் துறை பெரும் பங்கு வகிக்கும் சிங்கப்பூரையும் ஹாங்காங்கையும் பயணிகள் தவிர்த்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் தனிமைப்படுத்துதல், சிங்கப்பூரில் கிருமிப் பரிசோதனைகள் போன்றவை தொடர்பான விதிமுறைகள் அதற்கு முக்கிய காரணம் என்று பயணத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பெருந்தொற்றுக்கு முன்னர் இரண்டு இடங்களுக்கு மாதம் 30,000 விமானச் சேவைகளை விமான நிறுவனங்கள் இயக்கின.

ஆனால் இந்த பிப்ரவரி மாதத்தில் அந்த எண்ணிக்கை 4,514 மட்டுமே என்று விமானப் பயணத் தகவல்களை அளிக்கும் சிரியஸ் நிறுவனம் கூறியது.

பாலி போன்ற இடங்களில் ஐந்து நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் விதிமுறையால் விமான நிறுவனங்கள் அங்கு மீண்டும் சேவைகளைத் தொடங்கத் தயங்குகின்றன.

ஒப்புநோக்க, ஐரோப்பிய நாடுகள் பெருந்தொற்றுக்கு முந்தைய விமானப் பயணங்களில் 75 விழுக்காட்டை எட்டியுள்ளன. அமெரிக்காவில் அந்த விகிதம் 86 விழுக்காடாக உள்ளது.

பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் வெளிநாட்டுப் பயணிள் பயணத்துக்கு முன்பு பிசிஆர் பரிசோதனைகள் செய்யத் தேவை இல்லை. தடுப்பூசிச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் போதும்.

எனினும் இருபதுக்கும் அதிகமான நாடுகளுடன் தடுப்பூசிப் பயணப் பாதைகளை அமைத்துக்கொண்டுள்ள சிங்கப்பூர், பயணிகளைச் சோதிப்பதில் ஏஆர்டி பரிசோதனைகளின் செயல்திறனை ஆய்வு செய்து வருகிறது.

இருப்பினும், தனது எல்லைகளை மூடியிருக்கும் சீனாவில் விமானப் பயணங்கள் வழக்கநிலைக்குத் திரும்பினால்தான் ஆசியாவில் மீண்டும் அத்துறை வளர்ச்சி பெறும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பா, அமெரிக்கப் பயணத் துறையில் வலுவான வளர்ச்சியும் ஆசியாவில் தேக்கநிலையும் இந்த ஆண்டு முழுவதும் தொடரும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.