கோலாலம்பூர்: மலேசியாவில் 130,000க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கு முதல் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது.
இது, சனிக்கிழமை வரையிலான நிலவரமாகும். ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் இயக்கம் ஒன்பது நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்த எண்ணிக்கை, ஐந்து முதல் 11 வயது வரையிலான மொத்த குழந்தைகளில் 3.8 விழுக்காடு என்று அரசாங்கத்தின் 'கொவிட்நவ்' இணையப்பக்கம் தெரிவித்தது.
இம்மாதம் 7ஆம் தேதி வரை அந்த வயதுப் பிரிவில் உள்ள 3.6 மில்லியன் குழந்தைகளில் 663,641 குழந்தைகள் தடுப்பூசிக்குப் பதிந்து கொண்டுள்ளனர்.
எட்டு வார இடைவெளியில் அவர்களுக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசிக்குப் பதிந்துகொள்ள சுகாதார அதிகாரிகள் ஊக்குவித்து வருகின்றனர்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர் களில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனின் ஆறு வயது மகனும் ஒருவர்.
மலேசியாவில் கடந்த ஆறு மாதங்களில் ஐந்து முதல் 11 வயது வரையிலான 26 குழந்தைகள் கொவிட்-19 தொற்றுக்கு பலியாகிவிட்டனர். இதே காலக்கட்டத்தில் 147,282 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 12 முதல் 17 வயது வரை 90 விழுக்காடு குழந்தை களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதை அந்நாட்டின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதேபோன்று பெரியவர்களில் 97.5 விழுக்காட்டினருக்கு மேல் இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பெரியவர்களில் பாதிப்பேருக்கு அதாவது 56 விழுக்காட்டினருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. மலேசியாவில் 21,072 புதிய கொவிட்-19 சம்பவங்கள் ஏற்பட்டு உள்ளதாக ஞாயிறு வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

