ஹாங்காங்: ஹாங்காங்கில் 5வது கொவிட்-19 தொற்று அலையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களாக தினசரி தொற்று எண்ணிக்கை 13 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த எண்ணிக்கை 100ஆக இருந்தது. ஆனால் ஞாயிறுஅன்று தினசரி தொற்று 1,300க்கு அதிகரித்துள்ளது.
அதிகாரிகள் தொற்றுக்கு எதிராக கடுமையாகப் போராடி வரும் வேளையில் அது கட்டுக்குள் வருவதாகத் தெரியவில்லை.
நேற்று மட்டும் 2,701 புதிய தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் 4,500 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியான கேரி லாம், மோசமடைந்துவரும் தொற்று நிலவரத்தை சீன அதிகாரிகளுடன் சேர்ந்து சமாளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
பரிசோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் என்றார் அவர்.
"ஐந்தாவது அலை, ஹாங்காங்குக்குப் பேரிடியாக உள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் நோயாளிகளை மதிப்பிட்டு தனிமைப்படுத்துவதற்கு நேரமாகிறது. விரும்பத்தகாத இந்த நிலைமை அரசாங்கத்துக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது," என்று திருமதி லாம் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அவரது நிர்வாகத்தின் அதிகாரிகள் மத்திய அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து ஹாங்காங்கின் கொவிட்-19 பரிசோதனை, தனிமைப்படுத்தும் வசதி களை வலுப்படுத்தி வருகின்றனர்.
ஹாங்காங்கில் சில நாட்களுக்கு ஒரு முறை தினசரி தொற்றுச் சம்பவங்கள் இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறது. செப்டம்பருக்குப் பிறகு கடந்த வாரம் எட்டாவது நபர் தொற்றுக்குப் பலியானார்.
இதற்கிடையே மார்ச் மாத இறுதி யில் தினசரி தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 28,000ஐத் தொடும் என மருத்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

