ஜகார்த்தா: சிங்கப்பூர், இந்தோனீசியா ஆகியவற்றின் இருதரப்பு பயண ஏற்பாட்டின்கீழ், இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் தீவுகளுக்கான படகு பயணம் சிங்கப்பூரின் தானா மேரா படகு முனையத்தில் இருந்து நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்குகிறது.
மெய்நிகர் சந்திப்பு ஒன்றில், இந்தோனீசியாவின் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஏர்லங்கா ஹர்டர்ட்டா இதனைச் சொன்னார்.
இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டதோடு, சிங்கப்பூரில் 14 நாள்கள் தங்கியிருந்தவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தல் இல்லா இப்பயணத்திற்குத் தகுதி பெற முடியும்.
தற்போதைக்கு நாளொன்றுக்கு ஒரு படகு பயணத்திற்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சிஎன்ஏ ஊடகத்திடம் பேசிய பாத்தாமில் செயல்படும் சொகுசு ஓய்வுவிடுதி ஒன்றின் தலைவரான ஆண்டி ஃபோங் சொன்னார்.
240 பேர் செல்லக்கூடிய படகில் கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக 120 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றார் அவர்.
சுகாதார நெறிமுறைகள் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், சிங்கப்பூரில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள், உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பிரித்து வைக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
தானா மேராவில் இருந்து நோங்கஸ்புராவிற்குத் தினமும் பிற்பகல் 3 மணிக்கும் பாத்தாமின் நோங்கஸ்பூராவில் இருந்து தானா மேராவிற்கு பிற்பகல் 1 மணிக்கும் படகுச் சேவை இருக்கும் என்றார் அவர்.
பிந்தானுக்கு நேரடி படகுச் சேவை இருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.
இதற்கிடையே, கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை ஐந்தில் இருந்து மூன்று நாள்களாக குறைப்பதாக இந்தோனீசிய நேற்று முன்தினம் சொன்னது.
வெளிநாட்டினர், இந்தோனீசிய குடிமக்கள் என இருவருக்கும் இது பொருந்தும். கொவிட்-19 சூழலைப் பொறுத்து மார்ச் 1ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ இது நடைமுறைக்கு வரும் என்று அந்நாட்டின் மூத்த அமைச்சர் லுஹுட் பண்ட்ஜைதன் சொன்னார்.
தொற்றுச் சம்பவங்கள் குறைந்து வருவதால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது என்றார் அவர்.

