விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

3 mins read
fff32f78-f9c5-4122-ad2e-96baa26877d3
-

தொற்று காரணமாக பூப்பந்துப் போட்டியில் இருந்து விலகிய லோ

சிங்கப்பூர்: பூப்பந்துக்கான ஆசிய குழு சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் பங்கேற்கவிருந்த சிங்கப்பூர் நட்சத்திர வீரர் லோ கியன் ஹினுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்ற சனிக்கிழமையன்று செய்யப்பட்ட பயணத்திற்கு முந்திய 'பிசிஆர்' பரிசோதனையில் இது தெரியவந்தது. எனவே, அப்போட்டியில் பட்டம் வெல்லும் சிங்கப்பூரின் கனவு தகர்ந்தது. பெண்கள் பிரிவிலும் நட்சத்திர வீராங்கனை இயோ ஜியா மின் உட்பட மூவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டி மலேசியாவின் சிலாங்கூரில் நேற்று தொடங்கி இம்மாதம் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

'மெக்வாயரை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க விரும்பவில்லை'

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுத் தலைவர் ஹேரி மெக்வாயர், தனது மோசமான ஆட்டத்தால், இப்பருவத்தில் பல கோல்களைக் குறிப்பாக, பர்ன்லி, சவுத்ஹேம்டன் குழுக்களுக்கு எதிராக விட்டுக்கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பேசிய அக்குழுவின் தற்காலிக நிர்வாகி ரானிக், "காயத்தில் இருந்து குணமடைந்து வந்த பிறகு மிகவும் சிறப்பாக விளையாடிய மெக்வாயர், கடைசி இரண்டு ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை. அவரது ஆட்டத் திறன் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அவரைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு விரும்பவில்லை," என்றார்.

'ர‌ஷ்ய வீராங்கனை வலீவா ஒலிம்பிக்கில் தொடர அனுமதி'

பெய்ஜிங்: ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய 'ஃபிகர் ஸ்கேட்டிங்' எனும் ஒருவித பனிச்சறுக்கு விளையாட்டின் ர‌ஷ்ய வீராங்கனையான கமிலா வலீவா, பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து விளையாட அனைத்துலக விளையாட்டு மன்றம் அனுமதி அளித்துள்ளது.

வலீவாவிடம் சென்ற டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டது இம்மாதம் 8ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால், அனைத்துலகப் போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், ஊக்கமருந்துக்கு எதிரான ர‌ஷ்ய அமைப்பு, அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்தது.

அதனை எதிர்த்து, அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் மேல்முறையீடு செய்தது. அந்த விசாரணையின் போது, தன் தாத்தாவுடைய மருந்து தவறுதலாக எப்படியோ தன் மருந்தோடு கலந்துவிட்டதாக வாதிட்டார் வலீவா. இதனையடுத்து, ஊக்கமருந்துக்கு எதிரான ர‌ஷ்யா அமைப்பு அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அளித்த அனுமதியை விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்றம் உறுதி செய்தது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன்: ஜோக்கோவிச் உறுதி

லண்டன்: தான் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும், தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் என்று டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச் கூறியுள்ளார்.

பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தியேக நேர்காணலின்போது, பிரெஞ்சு பொதுவிருதுப் போட்டி, விம்பிள்டன் போட்டி உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் பங்கேற்பதை விட்டுக்கொடுக்க தயாரா என்று தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஜோக்கோவிச்சிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "ஆமாம், அதற்கான விலையைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். நான் தடுப்பூசிக்கு எதிராக இருந்ததே கிடையாது. என்றாலும் அது குறித்து முடிவெடுப்பதற்கான சுதந்திரத்திற்கு நான் எப்போதும் ஆதரவளித்துள்ளேன். சிறு வயதில் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டுள்ளேன்," என்றார்.

எதிர்காலத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து தாம் 'திறந்த மனப்பான்மையுடன்' இருப்பதாகவும் அவர் சொன்னார்.