ஜெனீவா: பெருந்தொற்றைவிட உலகளவில் மாசுபாடு காரணமாக அதிகமானோர் உயிரிழப்பதாக ஐநாவின் சுற்றுச்சூழல் அறிக்கை கூறுகிறது. எனவே, சில நச்சு ரசாயனங்களைத் தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக், மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாடு பெருமளவு மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அதனால் ஆண்டிற்குக் குறைந்தது 9 மில்லியன் பேர் சராசரி ஆயுட்காலம் வரை உயிர்வாழாமல் அகால மரணமடைந்துவிட்டதாகவும் அறிக்கை கூறுகிறது.
வேர்ல்ட்டோமீட்டர் தரவின்படி, கிருமித்தொற்று காரணமாக இதுவரை உலகளவில் 5.9 மில்லியன் பேர் உயிரிழந்துவிட்டனர்.
"நச்சுப் பொருட்களால் ஏற்படும் அபாயங்களைக் கையாள்வதற்கான தற்போதைய அணுகுமுறைகள் தோல்வியடைந்துள்ளதை இது தெளிவாக காட்டுகிறது. இதன் விளைவாக சுத்தம், ஆரோக்கியம் ஆகிய மக்களின் முக்கிய உரிமைகள் மீறப்படுகின்றன," என்று தனது அறிக்கையில் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் டேவிட் பாய்ட் சொன்னார்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் நான்-ஸ்டிக் பாத்திரங்களுக்கான, புற்றுநோயோடு தொடர் புடைய, குறிப்பிட்ட வகை ரசாயனங்களுக்குத் தடை விதிக்கவும் அமைப்பு வலியுறுத்தியது.

