ஹாங்காங்: கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் களைவதற்கான முயற்சியாக ஹாங்காங் ஒரு மில்லியன் மக்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் அதற்கு உதவும் வகையில் சீனாவின் சுகாதார ஊழியர்கள் ஹாங்காங் செல்லவுள்ளதாகவும் உள்ளூர் ஊடகம் ஒன்று கூறுகிறது.
பரிசோதனைக்கு உட்பட மறுப்பவர்களுக்கு 10,000 ஹாங்காங் டாலர் (1,720 வெள்ளி) அபராதமாக விதிக்கப்படும் என்று பெயர் வெளியிடப்படாத ஒருவரை மேற்கோள்காட்டி சிங் தாவ் டெய்லி சொன்னது.
ஹாங்காங் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த பரிசோதனை மார்ச் மாத தொடக்கத்தில் ஆரம்பித்து, வாரத்திற்கு ஒருமுறை என மூன்று வாரங்களுக்கு நடைபெறும் என்று ஹெச்கே01 கூறுகிறது.
ஹாங்காங்கும் சீனாவும் இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும் அது சொன்னது. ஆனால், ஹாங்காங் அரசாங்கம் எந்தக் கருத்தும் கூறவில்லை.
இந்நிலையில், தொற்று உறுதி செய்யப்படும் அனைவரையும் ஹாங்காங் எங்கு தனிமைப்படுத்த போகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
தனிமைப்படுத்தல் மையங்களும் மருத்துவமனைகளும் 90 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பிவிட்டன.
எனவே, கொவிட்-19 நோயாளிகளுக்காக தங்குவிடுதிகளில் ஏறத்தாழ 10,000 அறைகளை ஏற்பாடு செய்வது குறித்து அதன் உரிமையாளர்களிடம் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் பேசி வருகிறார்.
ஹாங்காங்கில் இம்மாதம் தொற்றுச் சம்பவங்கள் 60 மடங்கு அதிகரித்துள்ளன.
இந்நிலையில் சீன அதிபர் ஸி ஜின்பிங், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, ஹாங்காங் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இதையடுத்து, ஹாங்காங் முழுவதுமாக முடக்கப்படுமோ என்ற பேச்சும் எழுந்துள்ளது.

