செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
81d6a9e8-fb1e-4fcd-9a90-77dd3c0f925e
-

போர் வீராங்கனைகள் ஆயுதம் பயன்படுத்த குவைத் தடை

குவைத்: பெண்கள் போர்ப்படைப் வீரர்கள் பிரிவில் சேர்வதற்கு குவைத் ராணுவம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் அவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் பெண்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேளை அவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டுமென்றால், ஆண் வீரர்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்று குவைத் ராணுவம் கூறியுள்ளது.

வளைகுடாவில் மிகவும் முற்போக்கான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் குவைத்தின் இந்த முடிவு, இணையத்தில் அந்நாட்டிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தின் இந்த முடிவை 'ஓர் அடி முன்னால் வைக்க, இரண்டு அடி பின்னால் சென்றுவிட்டது' என ஆர்வலர்கள் விமர்சித்து உள்ளனர்.

அந்நாட்டின் பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், போர் வீராங்கனைகளாக பெண்களைச் சேர்ப்பது குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் கட்டுப்பாடுகள் தளர்வு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது. கிருமித்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று முதல் மருத்துவமனை வளாகங்களில் ஒன்றுகூடுவோருக்கான கட்டுப்பாடுகள் இனி கிடையாது. நடன உள்ளரங்கங்கள் மீண்டும் செயல்படும்.

அனைத்துலகப் பயணிகள், விமானச் சிப்பந்திகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் 14 நாள்களில் இருந்து ஏழு நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சோதனை பயன்பாட்டில் டிரம்ப் செயலி

வா‌ஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தனிப்பட்ட 'ட்ரூத் சோ‌ஷியல்' என்ற செயலியை சோதனை அடிப்படையில் நேற்று முதல் பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 2ஆம் முறை போட்டியிட்டு தோற்ற பிறகு டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது ஃபேஸ்புக், கூகல் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இதை எதிர்த்து டுவிட்டர், ஃபேஸ்புக், கூகல் நிறுவனங்கள் மீது டிரம்ப் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை ஃபுளோரிடா நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் தான் சொந்தமாக சமூக ஊடகம் ஒன்றைத் தொடங்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார்.

டிரம்ப்பின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், அவரது செயலியை தற்போது 500 பேர் சோதனை அடிப்படையில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.