சான் சிரோ: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இன்டர் மிலான் குழுவை இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் வென்றது லிவர்பூல்.
இத்தாலியில் நடைபெற்ற இந்த ஆட்டம் கோல் எதுவும் இல்லாமல் சமநிலையில் முடிந்துவிடுமோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரொபர்ட்டோ ஃபிர்மினோ கோல் போட்டு லிவர்பூலை முன்னிலை பெறச் செய்தார்.
75வது நிமிடத்தில் அவர் போட்ட கோலைத் தொடர்ந்து, 83வது நிமிடத்தில் சாலா இன்னொரு கோலைப் போட்டார்.
போர்ச்சுகல் வீரர் டியேகோ ஜோட்டா காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதைத் தொடர்ந்து, ஃபிர்மினோ களமிறக்கப்பட்டார்.
இன்டர் குழு கோல் எதுவும் போடவில்லை என்றாலும், வலுவான தொடக்கம் கொடுத்த லிவர்பூலுக்கு அது மிகவும் அச்சுறுத்தலாகவே இருந்தது.
இந்த முதல் சுற்று ஆட்டத்தில், எதிரணி மைதானத்தில் இரண்டு கோல்கள் போட்டு 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற லிவர்பூல், காலிறுதிக்கு முன்னேறுவதற்கான தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
அடுத்த மாதம் 8ஆம் தேதி ஆன்ஃபீல்டில் இரண்டாவது சுற்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்திலும் லிவர்பூலே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லிவர்பூல் தொடர்ந்து ஏழு போட்டிகளாக வாகைசூடி வருவது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் சால்ஸ்பர்க், பயர்ன் மியூனிக் குழுக்கள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது.
சால்ஸ்பர்க்கின் அடமு 21வது நிமிடத்தில் கோல் போட்டு தமது குழுவை முன்னிலை பெறச் செய்தார்.
இதைத்தொடர்ந்து மேலும் இரண்டு கோல்களைப் போடக்கூடிய அக்குழுவின் முயற்சிகளை பயர்ன் மியூனிக் தடுத்துவிட்டது. இருப்பினும், பயர்ன் மியூனிக் குழு 1-0 என தோற்றுவிடும் நிலையே நீடித்
தது.
90வது நிமிடத்தில் கோமன் போட்ட கோல், பயர்ன் குழுவின் தோல்வியைத் தவிர்த்து ஆட்டத்தைச் சமன் செய்தது.

