உக்ரேன்-ரஷ்யா எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரிப்பு
மாஸ்கோ: உக்ரேனியப் படைகளுக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கிழக்கு உக்ரேனில் நேற்று மீண்டும் மோதல் வெடித்தது.
இதையடுத்து, ரஷ்யா உடனடியாக படையெடுக்கக்கூடும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கை அனைத்துலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
லுஹான்ஸ்க் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள பகுதியில் நடந்த மோதலில் கட்டடங்கள் சேதமடைந்ததாக ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் சொன்னார்.
வியாழனன்று நடந்த மோதலில் பாலர் பள்ளி ஒன்று சேதமடைந்தது. குறிப்பாக அதன் உடற்பயிற்சிக் கூடம் தாக்கப்பட்டது.
"காலை உணவுக்குப் பிறகு, பிள்ளைகள் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லவிருந்தனர். அடுத்த 15 நிமிடத்தில் நிலைமை மோசமாகியிருக்கும்," என்று பள்ளி ஊழியர் ஒருவர் ஏஎஃப்பியிடம் கூறினார்.
பள்ளியில் இருந்த 20 பிள்ளைகளும் 18 பெரியவர்களும் இத்தாக்குதலில் காயமடையாமல் தப்பினர்.
உக்ரேன் மீதான தாக்குதலை நியாயப்படுத்த ரஷ்யா சாக்குபோக்கைத் தயார்படுத்தி வருவதாக அமெரிக்கா முன்பிருந்தே எச்சரித்து வந்தது.
ரஷ்ய ராணுவத்தின் பயிற்சியை அந்நாட்டின் அதிபர் புட்டின் பார்வையிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, புட்டினின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என உலகம் கவனிக்கிறது.
இதற்கிடையே, பெலாரஸுடன் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்யா ஏவுகணைகளைச் செலுத்தி பயிற்சி மேற்கொண்டது.
நேட்டோ நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகள் முழுவதும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற ரஷ்யா, உக்ரேன் மீதான நெருக்கடியை அதிகரித்து வருகிறது.
ரஷ்யா படையெடுப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் ஐநாவிடம் சொன்னார்.
ஆனால், உக்ரேனை ஒட்டிய எல்லையில் இருந்து ஏறத்தாழ 149,000 படை வீரர்கள் திரும்பப் பெறப்பட்டதாகவும் கூறுகிறது.
ஆனால், உக்ரேனும் அமெரிக்காவும் ரஷ்ய வீரர்கள் திரும்பப் பெறப்படவில்லை என்கின்றன.

