ஹாங்காங்: கிருமிப் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு இடையில், ஹாங்காங் தலைமை நிர்வாகிக்கான தேர்தல் மே மாதம் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு
உள்ளது.
அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்துவதாக அதன் தற்போதைய தலைமை நிர்வாகி கேரி லாம் சொன்னார்.
இதுவரையில்லாத அளவுக்கு ஆக அதிகமான தொற்றுச் சம்பவங்கள், அதிகரித்து வரும் உயரிழப்புகள் எனக் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது ஹாங்காங்.
சென்ற ஜனவரி மாதம் முதல் புதன்கிழமை வரை ஹாங்காங்கில் 16,600 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகளில் அங்குப் பதிவான ஒட்டுமொத்த தொற்றுச்சம்பவங்களின் எண்ணிக்கையாகும் இது.
எனவே, மருத்துவமனைகளும் தனிமைப்படுத்தல் மையங்களும் ஊழியர் பற்றாக்குறையால் திணறுகின்றன.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளவர்களுக்கு 7 நாளில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அடுத்த 7 நாள்களுக்கு அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட பெற்றோர்கள் முனைப்பு காட்டுகின்றனர்.
இரண்டு பச்சிளம் குழந்தைகள் தொற்றுக்குப் பலியானது ஹாங்காங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து மூன்று வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போட ஹாங்காங் இம்மாதம் 15ஆம் தேதி அனுமதி அளித்தது.

