பிகேஆர், மூடா பேச்சுவார்த்தை தோல்வி
கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிகேஆர், மூடா கட்சிக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. "மீதமுள்ள ஏழு தொகுதிகளுக்கு பிகேஆர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளது, இரு கட்சிகளுக்குமான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதையே காட்டுகிறது," என்றார் மூடா கட்சியின் சையத் சாதிக். பிகேஆர் கட்சி இரண்டு தொகுதிகளில் இந்தியர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கிறது மேற்கு ஆஸ்திரேலியா
பெர்த்: வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கத் தயாராகிவிட்டது மேற்கு ஆஸ்திரேலியா. "இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் மார்ச் 3ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தல் இல்லாமல் மேற்கு ஆஸ்திரேலியாவிற்குப் பயணம் செய்யலாம்," என்று அம்மாநில முதல்வர் மார்க் மெக்கோவன் சொன்னார். ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து செல்வோர் மூன்று தடுப்பூசிகள் போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
சிட்னி, மெல்பர்ன் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, இரவு கேளிக்கை விடுதிகளில் ஆட்டமும் பாட்டமும் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.
கிணற்றில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஸாபுல் மாநிலத்தின் ஷோகாக் கிராமத்தில் நான்கு நாள்களாக ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த சிறுவன் உயிரிழந்தான். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று ஹைதர் எனும் அந்த ஆறு வயது சிறுவன் வெளியே மீட்கப்பட்டான். ஆனால், வெளியில் கொண்டு வரப்பட்ட அச்சிறுவனிடம் எந்த அசைவும் இல்லை, சுவாசமும் இல்லை என்று உள்ளூர் செய்தியாளர் ஒருவர் சொன்னார். முதலில் 25 மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவன், அப்பகுதி மக்களின் முயற்சியால் 10 மீட்டர் மேலே கொண்டு வரப்பட்டான். அதன் பிறகு குழியின் அகலம் குறுகலாக இருந்ததால், சிறுவன் அங்கேயே விடப்பட்டான்.
இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாடு
கொழும்பு: இலங்கை அரசின் சிலோன் பெட்ரோலிய நிறுவனத்திடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்குப் பணம் இல்லை என்றும் அதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மோசமடையும் என்றும் எரிபொருள் அமைச்சர் சொன்னார். அரசாங்க விலை நிர்ணயம் காரணமாக அந்நிறுவனத்திற்கு 42 விழுக்காடு இழப்பு ஏற்பட்டதாக அவர் சொன்னார். இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறை எரிசக்தித் துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

