பெட்டாலிங் ஜெயா: மலேசிய எல்லைகளை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுத் தொடக்கத்தில் மீண்டும் திறக்க இலக்கு வகுக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு, எல்லைகளைத் திறக்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய செயல்முறைத் திட்டங்களை வகுக்கும் என்றும் அதன் பிறகு சில கட்ட மறுஆய்வுக்கு பிறகே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அமைச்சின் திட்டங்கள், பிரதமர் தலைமையிலான கொவிட்-19 கிருமிப் பரவல் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். ஹிஸாமுதீன் ஹுசேன் தலைமையிலான அமைச்சர்கள் குழுவிடமும் சமர்ப்பிக்கப்படும்," என்று தெரிவித்தார் கைரி.
அமைச்சர்கள் குழு, மலேசிய அமைச்சரவையிடம் கொவிட்-19 தொடர்பான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும்.
"அமைச்சரவைதான் நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்கும். சுகாதார அமைச்சு மட்டுமே முடிவெடுக்க இயலாது," என்றார் கைரி.
எல்லைகளைத் திறப்பது குறித்த பரிந்துரைகளையும், கடைப்பிடிக்க வேண்டிய செயல்முறைத் திட்டங்களையும் 2,3 வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கும்படி மலேசியச் சுகாதாரத் துறை கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக மலேசியாவின் ஊடகத் தகவல்கள் கூறின.
முன்னதாக, வரும் மார்ச் 1ஆம் தேதியில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லாத வகையில் நாட்டின் எல்லைகளைத் திறக்கப் பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய மீட்சி மன்றம் அந்தப் பரிந்துரையை முன்வைத்திருந்தது.
இதற்கிடையே, மலேசியாவின் சில மாநிலங்களில் கொவிட்-19 பாதிப்பால் கவலைக்குரிய நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 50%க்கும் அதிகமான படுக்கைகள் நிரம்பி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைச் சுவாசக் கருவிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 36 விழுக்காடு அதிகரித்ததாக மலேசியச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 நோயாளிகள் உள்ளிட்ட நோயாளி களின் எண்ணிக்கையைச் சமாளிக்கக் கூடிய நிலையில் மருத்துவமனைகள் இருப்பதாக அது நம்பிக்கை தெரிவித்தது.

