கோஹ்லிக்கு ஓய்வு; இன்றைய போட்டியில் விளையாட மாட்டார்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடமாட்டார்.
இது குறித்துப் பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், "வீரர்கள் 'பயோ பபுள்' எனும் கிருமிப் பரவலுக்கு எதிரான பாதுகாப்பு வளையத்தில் தொடர்ந்து இருந்தால் ஆட்டத்தில் தொய்வு ஏற்படும். கோஹ்லியும் தற்போது ஓட்டங்களைக் குவிக்க சிரமப்பட்டு வருவதால், ஓய்வுக்காக அவர் தற்போது விடுப்பில் சென்றுள்ளார்," எனத் தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரிலும்
முதல் டெஸ்ட் போட்டியிலும் கோஹ்லி பங்கேற்கமாட்டார். பெங்களூரில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியின்போதுதான் அவர் அணிக்குத் திரும்புவார்.
டெஸ்ட் கிரிக்கெட் அணி தலைவரானார் ரோஹித் சர்மா
மும்பை: இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட், 20 ஓவர் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முழு நேரத் தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 1ஆம் தேதி தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூலமாக அவர் முழுநேர தலைவராக பொறுப்பேற்கிறார்.
துணை தலைவராக இருந்த ரஹானே, முன்னணி வீரர் புஜாரா இருவரும் இலங்கை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இஷாந்த் சர்மாவும் நீக்கப்பட்டுள்ளார். புதுமுக வீரராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமார் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

