ஹாங்காங்: கொரோனா கிருமிப் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த ஹாங்காங் முழுமூச்சுடன் இயங்கிவருவதாக அரசாங்க அதிகாரிகள் இருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் கட்டுமானக் குழுவினரின் உதவியுடன் சமூகத் தனிமைக் கூடங்களையும் சிகிச்சை நிலையங்களையும் அமைக்க அரசு வேகமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உலகின் நிதி மையமான ஹாங்காங்கில் கிருமிப் பரவல் கட்டுமீறிச் சென்றதால் பொது மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கைகள் நிரம்பிவிட்டன.
அதனால், ஏராளமான நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வெளியே மழையிலும் நடுங்கும் குளிரிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை ஏற்பட்டதற்காக அரசுத் தரப்பில் மன்னிப்புக் கேட்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த நோயாளிகளுக்கு இருப்பிடங்களை ஏற்பாடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காய் டாக் உல்லாசக் கப்பல் நிலையம் கொவிட்-19 சிகிச்சை நிலையமாக மாற்றப்படும் என்றும் இங்கு 1,000 படுக்கைகள் ஏற்
படுத்தப்படும் என்றும் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
அதேநேரம் நகரத்தின் டிஸ்னிலேண்ட் உல்லாசக்கூடம் அருகே பென்னி'ஸ் பே என்னும் இடத்தில் கொவிட்-19 நோயாளிகளுக்காக 10,000 படுக்கைகளுடனான சிகிச்சை நிலையத்தை ஹாங்காங் கட்டுகிறது.
இதற்கான நில அகழ்வு சடங்கில் ஹாங்காங் அரசாங்கத் தலைவர் திருவாட்டி கேரி லாம் கலந்து கொண்டார்.
புதிய சிகிச்சை நிலையம் ஹாங்காங்கின் பெருந்தொற்றுக்கு எதிரான வசதிகளை கூடிய விரைவில் மேம்படுத்தும் என அப்போது அவர் கூறினார்.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஹாங்காங்கில் 6,067 பேருக்குப் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஹாங்காங்கின் தற்போதைய நிலையைக் குறிப்பிட்ட சீன அதிபர் ஸி ஜின்பிங், கிருமிக்கு எதிரான முக்கிய போராட்டத்தில் அந்நகரம் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார் என டா கங் பாவ் செய்தித்தாள் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கிருமிக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கம் முழுமூச்சுடன் இறங்கி இருப்பதாக அரசாங்க உயர்மட்ட அதிகாரி ஜான் லீ என்பவர் நேற்று தமது வலைப்பூ பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தினமும் பெருகும் கொவிட்-19 நோயாளிகளைச் சமாளிக்க புதிய சிகிச்சை நிலையங்கள்

