தீப்பற்றி எரியும் கப்பலில்
ஆடவர் உயிருடன் மீட்பு
கோர்ஃபு (கிரீஸ்): கிரீஸ் அருகே நடுக்கடலில் மூன்று நாள்களாக தீப்பற்றி எரியும் கப்பலில் இருந்து நேற்று ஒரு பயணி உயிருடன் மீட்கப்பட்டார். அதிலிருந்த மேலும் 11 பேரின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை என்று கடலோரக் காவல் படையினர் கூறினர். மீட்கப்பட்ட ஆடவரின் வயது 21. தாம் பெலருஸைச் சேர்ந்தவர் என்று மீட்புப் படையினரிடம் அவர் கூறினார். "கப்பலின் கீழ்த்தளத்திற்கு நான் சென்றிருந்தபோது திடீரென்று கூக்குரல்கள் கேட்டன. அதன் பிறகு நான் யாரையும் பார்க்கவில்லை," என்றும் அவர் தெரிவித்தார். இவர் மீட்கப்பட்டதன் மூலம் மற்றவர்களையும் உயிருடன் மீட்கும் நம்பிக்கை மீட்புப் பணியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
கிருமி தொற்றியோருக்கு தனிமை உத்தரவை நீக்க பிரிட்டன் திட்டம்
லண்டன்: கொவிட்-19 கிருமி தொற்றியவர்கள் சுயதனிமையில் இருக்க வேண்டும் என்னும் கட்டுப்பாட்டை நீக்க இந்த வாரம் திட்டங்களை வகுக்க இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார். அவ்வாறு செய்யப்பட்டால் கொவிட்-19 நோயாளிகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும் பெரிய ஐரோப்பிய நாடுகளில் முதலாவதாக பிரிட்டன் அமையும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 கிருமி தொற்றிய நிலையில் நோயாளிகள் கடைகளுக்குச் செல்லவும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் வேலைக்குச் செல்லவும் அனுமதி வழங்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வாறு செய்வது ஆபத்தானது என்று பிரதமரின் சுகாதார ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.
"கொவிட்-19 தொற்று என்பது திடீரென்று மாயமாய் மறைந்துவிடக்கூடியதல்ல. நமது சுதந்திரத்தைக் கட்டிப்
போடாத நிலையில் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதைத் தொடரவேண்டும். கிருமித்தொற்றுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று திரு ஜான்சன் தமது
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனீசியாவில் 158 பேர் மரணம்
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சனிக்கிழமை 59,384 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. 158 பேர் தொற்று காரணமாக மாண்டனர். அந்நாட்டில் இதுவரை ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும், 146,000 பேர் மரணமடைந்துள்ளனர். மக்கள்தொகை அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய நாடான இந்தோனீசியா மூன்றாம் கட்ட கிருமிப் பரவலை எதிர்த்துப் போராடி வருகிறது.
டிரம்ப்பின் சமூக ஊடகச் செயலி
சான்ஃபிரான்சிஸ்கோ: முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் புதிய சமூக ஊடகக் கைபேசிச் செயலியான 'ட்ரூத் சோஸியல்' இன்று (பிப்ரவரி 21) ஆப்ஸ்டோரில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் ஓராண்டு இடை வெளிக்குப் பின்னர் திரு டிரம்ப் சமூக ஊடகத்திற்குத் திரும்புவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. செயலியின்
சோதனைப் பதிப்பைப் பார்வையிட்டதாக அது கூறியது. இந்தச் செயலிக்கான கட்டமைப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியின் பெயர் 'பில்லி பி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய செயலி பற்றி பொதுமக்கள் எழுப்பும் பல்வேறு கேள்வி களுக்கு அவர் கடந்த வெள்ளிக்கிழமை பதிலளித்தார்.

