நியூயார்க்: அமெரிக்காவில் டெல்டா வகை கிருமித்தொற்றால் மாண்டவர்களைக் காட்டிலும் ஓமிக்ரான் தொற்றால் அதிகமானோர் மரணமடைந்ததாக 'நியூயார்க் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.
அன்றாட சராசரி தொற்று மரணங்கள் அமெரிக்காவின் 14 மாநிலங்களில் இருவாரங்களுக்கு முன் நிகழ்ந்ததைக் காட்டிலும் தற்போது அதிகம் நிகழ்ந்துள்ளன.
அலபாமா, அலாஸ்கா, ஆர்கன்சாஸ், கலிஃபோர்னியா, ஜியார்ஜியா, ஹவாயி, இடாஹோ, கெண்டக்கி, மெய்ன், ஓக்லஹோமா, டென்னஸ்ஸி, டெக்சஸ், யூட்டா மற்றும் மேற்கு விர்ஜினியா ஆகியன அந்த மாநிலங்கள்.
முதன்முதலாக நவம்பர் 24ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது முதல் அமெரிக்காவில் 30,163, 600க்கும் மேற்பட்ட புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அதேபோல 154,750 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. கிட்டத்தட்ட மூன்று மாத காலகட்டத்திற்கான நிலவரம் இது.
இதனை டெல்டா வகைத் தொற்றுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவில் 10,917,590 தொற்றுச் சம்பவங்களும் 132,616 மரணங்களும் பதிவாகி இருந்தன.
அதாவது, டெல்டா கிருமிப் பரவலைக் காட்டிலும் சுமார் 176 விழுக்காடு பாதிப்பை ஓமிக்ரான் ஏற்படுத்தி இருப்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது. நவம்பர் இறுதி வாக்கில் அமெரிக்காவில் ஓமிக் ரான் பரவத் தொடங்கியது.

