கொழும்பு: இலங்கையில் மிகக் கடுமையான பொருளியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முன் இல்லாத அளவில் அந்நாட்டின் பொருளியல் படுவீழ்ச்சி கண்டுள்ளது.
இந்நிலையில், அனைத்துலகப் பண நிதியத்தின் உதவியை அது நாடுகிறது.
நிதியத்துடனும் நிதி உதவி செய்யக்கூடிய மற்ற அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தயாராக இருப்பதாக அந்நாட்டின் தோட்டத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன நேற்று கூறினார்.
"கடந்த காலத்தில் அனைத்
துலகப் பண நிதியத்தின் உதவியை இலங்கை பலமுறை நாடியுள்ளது. இம்முறையும் அதனிடமிருந்து நிதி உதவி பெறுவது குறித்து
பரிசீலனை செய்து வருகிறோம்.
இலங்கையின் வெளிநாட்டு நாணயச் செலாவணி 3.2 பில்லியனுக்குச் சரிந்துள்ளது. இதனால் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பெருள்களுக்கான இறக்குமதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பணவீக்கமும் மோசமடைந்து வருகிறது.
வாங்கிய கடன்களில் ஏறத்தாழ 4 பில்லியன் அமெரிக்க டாலரை இவ்வாண்டு திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளியல், நிதி நிலை குறித்து அனைத்
துலகப் பண நிதியம் மதிப்பீடு செய்ய இருக்கிறது.
அதன் விவரங்களை இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றம் கூடும்போது வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர்.
"அனைத்துலகப் பண நிதியத்தின் மதிப்பீடு குறித்த விவரங்கள் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட வேண்டும். அதன்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்," என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார். சில நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மட்டுமே இருப்பில் உள்ளதாக திரு பத்திரன கூறினார்.
எரிவாயு வாங்க தேவையான தொகையை அரசாங்கத்துக்கு விடுவிக்கும்படி இலங்கை மத்திய வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் மின்சாரத் தடையும் ஏற்பட்டுள்ளது.
அடுத்த சில நாள்களில் தினந்தோறும் ஐந்திலிருந்து ஆறு மணி நேரத்துக்கு மின்சாரம் இல்லாமல் இலங்கை மக்கள் தவிக்கக்கூடும் என்று அந்நாட்டின் மின்சார ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், எரிவாயு விலை உயர்ந்தால் ஏற்கெனவே திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் இலங்கையின் நிலை மோசமடையும்.
"உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் வெடிக்கக்கூடாது என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். போர் மூண்டால் எரிவாயு விலை அதிகரிக்கும். அவ்வாறு நேர்ந்தால் இலங்கையை அது பெரிதளவில் பாதிக்கும்," என்றார் திரு பத்திரன.
மோசமடையும் பணவீக்கம்
இலங்கையில் தொடர்ந்து நான்காவது மாதமாகப் பணவீக்கம் முன் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இலங்கையின் தேசிய பயனீட்டாளர் விலைக் குறியீடு 16.8 விழுக்காடு ஏற்றம் கண்டது.
இந்திய அரசாங்கத்திடமிருந்து இலங்கை 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையைக் கொண்டு நாட்டுக்குத் தேவையான எரிவாயு வை வாங்க இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சிலோன் எரிவாயு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையின் பொருளியல் நிலைகுலைந்திருப்பதால் மளிகைப் பொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் இவ்
வளவுதான் வாங்க முடியும் என்று பேரங்காடிகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஒவ்வொரு வாகனத்துக்கும் குறிப்பிட்ட அளவு எரிவாயு மட்டுமே விற்க முடியும் என்று பல பெட்ரோல் நிலையங்கள் தெரிவித்துள்ளன.
கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்பட்டதிலிருந்து இலங்கையின் சுற்றுப்பயணத்துறை முடங்கியுள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் இலங்கை நாட்டவர்கள் சொந்த நாட்டுக்குப் பணம்
அனுப்புவதும் குறைந்துவிட்டது.

