செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
dce5fc9a-e39b-49c0-9c37-4492bdc9fa25
-

பிலிப்பீன்ஸ் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலா அருகில் உள்ள வாத்து, காடைப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு தலைதூக்கியிருப்பதாக அந்நாட்டின் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பண்ணைகளில் எச்5என்1 கிருமி வகை பரவியபோது தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் அதை முறியடித்தனர். ஆனால் இம்முறை எச்5என்6 கிருமி வகையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்ஸில் எச்5என்6 கிருமி வகை பாதிப்பு இல்லை என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கிருமி வகையால் பிலிப்பீன்ஸில் உள்ள வாத்து, காடை பண்ணைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவீன அம்சங்களுடன் கொண்டாடிய சவூதி அரேபியா

ரியாத்: கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு புதிய நாடாக சவூதி அரேபியா உருவெடுத்தது. இதை முதல்முறையாக அந்நாடு நேற்று கொண்டாடியது. கொண்டாட்டங்களின்போது பழமைவாத அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

மாறாக, நாட்டின் நவீன வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இசை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை போன்ற அம்சங்களுடன் கொண்டாட்டம் களைகட்டியது.

கலைநிகழ்ச்சியில் 3,500 கலைஞர்கள் பங்கெடுத்ததாக சவூதி ஊடகம் தெரிவித்தது.

டுருடோவின் அவசரகால அதிகாரங்கள் ஏற்கப்பட்டன

ஒட்டாவா: கொவிட்-19 நெருக்கடிநிலை தொடர்பாக கனடாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர அவசரகால அதிகாரங்களை அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் டுருடோ நடைமுறைப்படுத்தினார். இதற்கு கனடாவின் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக தலைநகர் ஒட்டாவாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த வாரயிறுதியில் காவல்துறை நடவடிக்கை எடுத்ததை அடுத்து, ஒட்டாவாவில் வழக்கநிலை திரும்பியது. திரு டுருடோ நடைமுறைப்படுத்திய அவசரகால அதிகாரங்கள் தேவையற்றது என்று எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்துள்ளனர். திரு டுருடோ தமது அதிகாரங்களைத் தவறான முறையில் பயன்படுத்துவதாக அவர்கள் குறைகூறினர். தற்காலிக அவசரகால அதிகாரம் இன்னும் தேவைப்படுவதாக திரு டுருடோ நேற்று முன்தினம் கூறினார்.