வெலிங்டன்: கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்துக்கு எதிராக நியூசிலாந்தில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்
காரர்களுக்கும் கலகத் தடுப்பு காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே நேற்று கைகலப்பு மூண்டது.
இதில் காவல்துறை அதிகாரிகள் மூவர் காயமடைந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் இந்த வன்முறைச் செயல் மிகவும் அவமானத்துக்குரியது என்று நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா
ஆர்டர்ன் சாடினார்.
காவல்துறை அதிகாரிகளை நோக்கி அமிலம் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளை நோக்கி காரை வேகமாகச் செலுத்தியதாகவும் அதிகாரி
களுக்கு மிக அருகில் சென்றதும் காரை அவர் திடீரென நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களாக தலைநகர் வெலிங்டனில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக வழக்கநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்த சாலைத் தடுப்புகளைக் காவல்துறை அதிகாரிகள் நேற்று அகற்ற முயன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இருக்கும் குறிப்பிட்ட சிலர் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதாக நியூசிலாந்து காவல்துறையின் உதவி ஆணையர் ரிச்சர்ட் சேம்பர்ஸ் கூறினார்.
வன்முறையைக் கட்டவிழ்க்க வேண்டும் என்ற இலக்குடன் குறிப்பிட்ட சிலர் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதாக அவர் தெரிவித்தார்.

