இந்தியாவுக்கான தடுப்பூசிப் பயணப் பாதையில் அனுமதிக்கப்படும் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.
பொது மருத்துவமனைகளிலும் பலதுறை மருந்தகங்களிலும் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு அவர் திங்கள் (பிப்ரவரி 21) அன்று எழுதிய கடிதத்தில் இதைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு மருத்துவப் பணியாளர்கள் நாடு திரும்பி தங்கள் அன்புக்குரியவர்களைப் பார்க்க அது உதவும் என்றும் அவர்கள் சிங்கப்பூர் வந்த பின்னர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
அதன் பொருட்டு பிலிப்பீன்சுடன் சிங்கப்பூர் தடுப்பூசிப் பயணப் பாதையை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவப் பணியாளர்களின் மீதான பணிச்சுமையையும் அழுத்தத்தையும் குறைக்க அரசாங்கம் எடுக்கவுள்ள பல்வேறு நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் விளக்கினார்.
மருத்துவப் பணியாளர்கள் வரும் நாள்களில் எடுத்துக்கொள்ளும் மருத்துவ விடுப்பை மருத்துவமனை விடுப்பாகவும் பதிந்துகெசாள்ளலாம் என்று திரு ஓங் சொன்னார்.
இதன்வழி, மருத்துவப் பணியாளர்களின் மருத்துவ விடுப்பு முடிந்துவிட்டால் அவர்கள், சம்பளமில்லா விடுப்பு எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.
சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திரு ஓங் கூறினார்.
நோயாளிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க, மிதமான அறிகுறிகள் உள்ளவர்கள் வீடுகளில் குணமடைவதையும் ஊக்குவிக்கும் பொதுச் செய்திகள் பரப்பப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், கொவிட்-19 தொற்றிய ஊழியர்கள் மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களைக் கட்டாயம் சமர்ப்பிக்கும்படி கேட்கவேண்டாம் என்று முதலாளிகளிடம் எடுத்துரைக்கப்படும்.
அத்துடன், இந்த கடினமான காலகட்டத்தைக் கடக்க, சுகாதார அமைச்சும் மருத்துவ அமைப்புகளின் நிர்வாகங்களும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஆதரவு அளித்த ஆவன செய்யும் என்றும் சுகாதார அமைச்சர் உறுதி அளித்தார்.

