ஹாங்காங்: ஹாங்காங்கில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு, பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.
இது கிருமிப் பரவல் சூழ்நிலையைக் கையாள ஹாங்காங் தயாராக இல்லை என்பதைக் காட்டுவதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
கிருமித்தொற்று சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்து வருவதால், ஹாங்காங்கின் மருத்துவமனைகளும் தனிமைப்படுத்தல் வசதிகளும் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில், தொற்றுக்கு ஆளான தங்கள் பிள்ளைகளுடன் மருத்துவமனைகளில் இருக்க முடியவில்லை என்று சில பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.
பெற்றோர்களின் இந்த புகார் சுகாதார ஊழியர்கள் உட்பட பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிள்ளையுடன் பெற்றோர் ஒருவர் இருப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும், இல்லையென்றால் அதனால் பிள்ளையின் நிலைமை மோசமாகக்கூடும்," என்று ஹாங்காங் பல்கலைக்கழக மருத்துவர் சித்தார்த் ஸ்ரீதர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"இது போன்ற சமயங்களில், பகுத்தறிவு, இரக்கத்துடன் இருப்பது முக்கியமானது," என்றும் அவர் சொன்னார்.
பெற்றோரைப் பிரிந்திருக்கும் பிள்ளைகள் ஏழு நாள்கள் வரை சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக சில பெற்றோர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள தாக்கத்தையும் பாதிப்பையும் தணிக்கும் வகையில், சிறு வர்த்தகங்கள், குடியிருப்பாளர்களுக்கு வரிச் சலுகைகள், மானியங்களை அறிவித்துள்ளது ஹாங்காங். 2022-23ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் இவை அறிவிக்கப்பட்டன.
100 விழுக்காடு சம்பள வரிவிலக்கு, 10,000 ஹாங்காங் டாலர் மதிப்பிலான நுகர்வு பற்றுச்சீட்டுகள், வேலையில்லாதவர்களுக்கு நிதி உதவி, நேரடியாகப் பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு மானியங்கள் ஆகியவை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஹாங்காங்கின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.0 விழுக்காட்டில் இருந்து 3.5 விழுக்காடு வரை வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹாங்காங் நிதிச் செயலர் பால் சான் சொன்னார்.

