லண்டன்: உலகில் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி இப்போது போதிய அளவுக்கு இருக்கிறது. தேவையைவிட இருப்பு அதிகமாக இருக்கிறது என்று முதன் முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனமும் 'கேவி' என்ற கூட்டமைப்பும் 'கோவேக்ஸ்' என்ற உலக தடுப்பூசி செயல்திட்டத்தை நிர்வகித்து நடத்தி வருகின்றன. ஜனவரி நிலவரப்படி பல நாடுகளுக்கும் விநியோகிப்பதற்காக 436 மில்லியன் தடுப்பூசி மருந்து தயாராக இருந்தது என்று கோவேக்ஸ் செயல் திட்டக் குழுமம் தெரிவித்து உள்ளது.
இருந்தாலும் வளரும் நாடுகள் மே மாத முடிவுவாக்கில் 100 மில்லியன் தடுப்பூசிகளுக்கு மட்டுமே கோரிக்கை விடுத்துள்ளன.
முதன்முதலாக இப்போதுதான் தேவையைவிட இருப்பு அதிகமாக இருக்கிறது என்று கோவேக்ஸ் குழுமத்தின் ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.
இது பற்றி கருத்து கூறிய கேவி அமைப்பின் பேச்சாளர், தேவையை நிறைவேற்றும் அளவுக்கு இப்போது போதிய இருப்பு இருக்கிறது. இருந்தாலும் பல ஏழை நாடுகளைப் பார்க்கையில் மக்களுக்குத் தடுப்பூசிகளைப் போடுவதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகத் தெரிகிறது என்றார்.
பல ஆப்பிரிக்க நாடுகளில், தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பெரிய குளிர்சாதனப் பெட்டிகளும் அவற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்கான சிறிய குளிர்சாதனப் பெட்டிகளும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
அத்தகைய நாடுகளில் தடுப்பூசி இயக்கம் மெதுவாகவே இருந்தால் புதிய உருமாறிய கிருமிகள் தலையெடுக்க வாய்ப்பு உண்டு என்று உலக சுகாதார நிறுவனமும் இதர பொது சுகாதார வல்லுநர்களும் எச்சரித்து உள்ளனர்.

