விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

2 mins read
993ebfd5-8950-4fa4-b2d5-d8927d0e28b8
-

வலுவான நிலையில் செல்சி

லண்டன்: காற்பந்தாட்டத்தின் இரு பாதியிலும் ஒவ்வொரு கோல் போட்டு 2-0 என்ற கோல் கணக்கில் லில்லி குழுவை வென்றது செல்சி. சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கான முதல் போட்டியில் செல்சியின் சொந்த மண்ணில் இக்குழுக்கள் மோதின.

எட்டாவது நிமிடத்தில் ஹக்கிம் உதைத்த பந்தை தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ளினார் கை ஹவெர்ட்ஸ். தாக்குதல் ஆட்டத்தில் சிறந்து விளங்கிய ஹவெர்ட்சின் மேலும் இரண்டு கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. புலிசிக் 63வது நிமிடத்தில் கோல் போட்டார்.

செல்சியின் தற்காப்பு அரணான தியாகோ சில்வாவைத் தாண்டி, லில்லி குழுவின் ரெனாடோ சான்செஸ், பெஞ்சமின் அன்ட்ரே, ஜோனதன் பாம்பா ஆகியோரால் கோல் போடமுடியவில்லை. அதையும் தாண்டி சென்ற பந்தை செல்சி கோல் காப்பாளர் மென்டி தடுத்துவிட்டார்.

நட்சத்திர வீரர் ரொமேலு லுகாகு இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படவில்லை. இரண்டு கோல்கள் முன்னிலையுடன் அடுத்த மாதம் 16ஆம் தேதி லில்லி குழுவைச் சந்திக்கிறது செல்சி.

அதிவேக கோல் போட்டு அசத்திய யுவென்டஸ் அறிமுக வீரர்

வில்லாரியல்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்தாட்டத் தொடரின் மற்றோர் ஆட்டத்தில் ஆளுக்கொரு கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தன வில்லாரியல், யுவென்டஸ் குழுக்கள்.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் அறிமுகம் கண்ட யுவென்டஸ் வீரர் வலகோவிச் 32வது விநாடியிலேயே தனது முதல் கோலைப் போட்டார். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே அறிமுக வீரர் ஒருவர் போட்ட அதிவேகமான கோல் இது என்ற பெருமையைப் பெற்றார் வலகோவிச். ஃபியோரெண்டினா குழுவில் இருந்து செர்பிய வீரரான வலகோவிச்சை சென்ற மாதம் 58 மில்லியன் பவுண்டிற்கு வாங்கியது யுவென்டஸ்.

யுவென்டஸ் காலிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பைக் கடினமாக்கினார் வில்லாரியலின் பரேஜோ. 66வது நிமிடத்தில் அவர் கோல் போட ஆட்டம்

1-1 என்ற கோல்கணக்கில் சமநிலை கண்டது. 2வது சுற்று ஆட்டம் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

ரோமா நிர்வாகி மொரின்யோவுக்கு இரண்டு ஆட்டங்கள் தடை

மிலான்: ரோமா காற்பந்துக் குழுவின் நிர்வாகி

ஜோசே மொரின்யோவிற்கு இரண்டு ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹெல்லாஸ் வெரோனா குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட அவர், விளையாட்டுப் பகுதியின் எல்லைகோட்டிற்கு அருகே செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டம் 2-2 என்று சமநிலை கண்டது.