ஹாங்காங்கில் கொவிட்-19 தொடர்பான தடைகளால், ஆயிரக்கணக்கான உணவகங்களையும், மதுபானக்கூடங்களையும் மூடத் திட்டமிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அவற்றை மாதக் கணக்கில் மூடுவது குறித்து உரிமையாளர்கள் திட்டமிடுகின்றனர்.
சுமார் 5,000 உணவகங்கள் அந்தச் செலவுக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கின்றன. நகரின் மொத்த உணவக எண்ணிக்கையில் அது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு.
ஏற்கெனவே 1,200க்கும் அதிகமான உணவங்கள் தற்காலிகமாகவும், சுமார் 300 உணவகங்கள் நிரந்தரமாகவும் மூடப்பட்டுள்ள நிலையில், அந்தத் தகவல் வெளியானது.
அரசாங்கத்தின் ஊக்கத் தொகை நட்டத்தை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை என்று கூறப்பட்டது.
ஹாங்காங் அரசாங்கம் கொவிட்-19 பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதன் கீழ், சென்ற ஜனவரியில் இருந்து, மதுபானக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மாலை ஆறு மணிக்குப் பிறகு உணவகங்களில் அமர்ந்து உண்ணவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20ஆம் தேதி வரை, உணவக மேசைகளில் இருவருக்கு மேல் அமரக்கூடாது என்ற விதி நடப்பில் இருக்கும்.
தொடர்ந்து நட்டம் ஏற்பட்டுள்ளதால் நகரில் அமைந்திருக்கும் சுமார் ஈராயிரம் மதுபானக்கூடங்களும் மூடப்படலாம் என்று கருதப்படுகிறது.
பிப்ரவரி 23ஆம் தேதி அரசாங்கம் அறிவித்த நிவாரண உதவித் திட்டம் போதுமானதாக இல்லை என்றும், மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.

