கீவ்: உக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதலின் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை நூறு டாலருக்கும் மேல் உயர்ந்தது; 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக எண்ணெய் விலை அவ்வாறு கூடியது.
எரிபொருள் விநியோகம் அதனால் மேலும் தடைகளை எதிர்நோக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு விலை 40 விழுக்காடு கூடியது; தங்கம், அலுமினியம், செம்பு, நிக்கல் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் அவற்றுக்கான எண்ணெய், எரிவாயுத் தேவையில் 25 விழுக்காட்டை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்கின்றன.
அமெரிக்காவும், ஐரோப்பாவும் கூடிய விரைவில் மாஸ்கோவின் மீது அதிகத் தடைகளை விதிக்கக்கூடும்.
எரிபொருளுக்குத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், ரஷ்ய எண்ணெய்ப் பீப்பாய்களை வர்த்தகர்கள் அதிகக் கவனத்துடனே கையாள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருங்கடல் வட்டாரத்தில் உள்ள உக்ரேனிய நகரங்களில் ரஷ்யத் துருப்புகள் நுழைந்ததுமே உலகெங்கும் பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டது. மாஸ்கோ முழுவீச்சிலான படையெடுப்பை நிகழ்த்தியிருப்பதாக உக்ரேன் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தங்கத்தின் விலை 3.4% உயர்ந்து, ஓர் அவுன்ஸிற்கு 1,973 டாலருக்கும் மேல் பதிவானது. 2020 செப்டம்பருக்குப் பிறகு ஆக அதிக விலை அது.

