ஹாங்காங்: கொவிட்-19 கிருமித்தொற்று அறவே இல்லாத நிலையை எட்ட ஹாங்காங் இலக்கு கொண்டுள்ளது. ஆனால் அந்நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது மளமளவென அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரை ஹாங்காங் அதிகாரிகள் தனிமைப்படுத்துகின்றனர். தனிமைப்படுத்தப்படுவோருடன் அவர்களது குடும்பத்தார் தொடர்பில் இருக்க முடியாது. இந்த விதிமுறை பச்சிளங் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் பிள்ளைகளுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டால் அவர்
களைத் தங்களிடமிருந்து அதிகாரிகள் பிரித்துவிடுவர் என்ற அச்சம் ஹாங்காங் மக்களை உலுக்கியுள்ளது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தையை அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். பெற்றோர் இல்லாமல் அக்குழுந்தை தனியாக இருந்தது. இந்த நிலை தங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படும் என்ற கவலை ஹாங்காங்கில் உள்ள பல பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் ஹாங்காங்கில் கிருமித்தொற்று காரணமாக பல சிறுவர்கள் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் இன்னொரு 11 வயது குழந்தையும் அடங்கும்.
ஹாங்காங்கில் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டின் தலைமை நிர்வாகி கேரி லாமுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்தவும் சிகிச்சை அளிக்கவும் தேவைப்படும் எட்டு தற்காலிக நிலையங்களைக் கட்ட சீனாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்துடன் ஹாங்காங் ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்காலிக நிலையங்கள் மொத்தம் 50,000 படுக்கைகளைக் கொண்டிருக்கும் என்றும் ஹாங்காங்கெங்கும் பல்வேறு இடங்களில் அவை கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தற்காலிக நிலையங்களைக் தங்களுக்குச் சொந்தமான காலியாக இருக்கும் தனியார் நிலங்களில் கட்டலாம் என்று சொத்து மேம்பாட்டாளர்கள் ஹாங்காங் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தின நிலவரப்படி ஹாங்காங்கில் மேலும் 8,798 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை கூடிய விரைவில் 10,000ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் அன்றாட பாதிப்பு 180,000ஆகப் பதிவாகக்கூடும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முன்னுரைத்துள்ளனர்.

