சுமத்ரா நிலநடுக்கம்: 6 பேரைக் காணவில்லை

சுமத்ரா நிலநடுக்கம்: 6 பேரைக் காணவில்லை

1 mins read
77e4dc17-43d6-4c12-a035-3d1b4ff07908
சுமத்ராவில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த ஒரு பள்ளிவாசல் (படம்: ராய்ட்டர்ஸ்) -

இந்தோனீசியாவின் சுமத்ராவில் இரண்டு நாள்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காணாமல் போன ஆறு பேரை இந்தோனீசிய மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.

காணமால் போன ஆறு பேரும் நிலச்சரிவில் புதையுண்டிருக்கலாம் என்று இந்தோனீசிய தேசிய பேரிடர் மீட்புப் பணி அமைப்பின் பேச்சாளர் கூறினார்.

வெள்ளிக்கிழமை காலை உண்டான நிலநடுக்கத்தில் குறைந்தது எட்டுப் பேர் மாண்டனர், 86 பேர் காயமுற்றனர். அவர்களில் 10 பேருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

முதலில் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து 6.2 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் உண்டானதாகவும் அமெரிக்க நிலவியல் ஆய்வு அமைப்பு கூறியது.

நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள், பள்ளிவாசல்கள், பள்ளிகள், வங்கிகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்தன.

ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

சுமத்ராவில் இது மழைக்காலம். அதனால் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால், மேடான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்தோனீசிய வானிலை ஆய்வு நிலையம் பொதுமக்களை எச்சரித்தது.