உலகின் பல நாடுகளில் உக்ரேனுக்கு ஆதரவாகப் பல்லாயிரம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததற்குக் கண்டனம் தெரிவிக்க பல முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
லண்டன், பிரிட்டன் லண்டனில் பிரிட்டிஷ் பிரதமரின் இல்லமும் அலுவலகமும் அமைந்துள்ள டவுனிங் ஸ்த்ரீட்டில் நூற்றுக்கணக்கான உக்ரேனியர்கள் கூடினர். பிரிட்டனில் வசிக்கும் அவர்கள் உக்ரேனிய தேசியக் கொடியையும், அமைதி கோரும் பலகைகளையும் எடுத்துவந்தனர்.
சிட்னி, ஆஸ்திரேலியா சிட்னியில் கனத்த மழையையும் பொருட்படுத்தாமல் சாலையில் மக்கள் ஒன்றுதிரண்டனர். உக்ரேனியத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு அவர்கள் அணிவகுத்துச் சென்றனர். இது மூன்றாம் உலகப் போர். இது உக்ரேனுக்கு எதிரான போர் மட்டுமல்ல, இது அனைத்து உலக நாடுகளுக்கு எதிரான போர் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூவினர்.
தோக்கியோ, ஜப்பான் தோக்கியோவின் முக்கிய கடைத்தொகுதிப் பகுதியில் பெரியவர்கள் சிறியவர்கள் என பலதரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். "புட்டினை நிறுத்துங்கள், போரை நிறுத்துங்கள்" என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
சாவ் பாலோ, பிரேசில் தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ரஷ்யாவின் நடவடிக்கைக்குக் கண்டம் தெரிவிக்கும் விதத்தில் மக்கள் சாலைகளில் கூடினர். உக்ரேனியத் தேசியக் கொடியில் உள்ள நீலம், மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து அவர்கள் வந்தனர்.
ரஷ்யா ரஷ்யாவின் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உக்ரேனுக்கு ஆதரவாகப் பலர் திரண்டுவந்தனர். அவர்களில் பலர் ரஷ்யாவில் முக்கிய பிரமுகர்கள். அதிபர் விளாடிமிர் புட்னிக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டக் குரல் எழுப்பினர். மாஸ்கோவில் உள்ள உக்ரேனியத் தூதரகத்துக்கு வெளியே அவர்கள் மலர் கொத்துக்கள் வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சுமார் ஈராயிரம் பேர் கைதுசெய்யப்பட்டனர்.

