கியவ்: ரஷ்ய படைகளை எதிர்க்க, உக்ரேனிய குடிமக்கள் ஆயுதங்கள் ஏந்தி தங்கள் நாட்டைத் தற்காக்கக் களம் இறங்கியுள்ளனர்.
தம் வாழ்நாளில் துப்பாக்கியைத் தொடாத யூரிய் கொர்ச்செம்னி, 35, நேற்று நீள்துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டார்.
உக்ரேனின் புதிய தற்காப்புத் தொண்டூழியர் படையில் சேர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களளில் அவரும் ஒருவர்.
உக்ரேனிய படைகளுக்கு உதவ முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ள உக்ரேனிய அரசாங்கம் அவர் களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது.
ஆண்களும் சில பெண்களும் துப்பாக்கி சுடவும் வெடிகுண்டு வீசவும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஐம்பது அறுபது வயதுமிக்கவர்களும் இப்படைகளில் சேர்ந்து சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கியவில் உக்ரேனிய அதிபர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள சாலையில் ரஷ்யப் படைகளை எதிர்த்து சண்டையிட்ட உக்ரேனிய தொண்டூழியர் சுட்டு வீழ்த்தப்பட்டார். மேலும் ஒருவரை ரஷ்ய போர் வாகனங்கள் சுட்டுக் கொன்றதைப் பார்த்ததாக ஏஎஃப்பி நிருபர் ஒருவர் தெரிவித்தார்.
தாய்நாட்டைக் காக்க உக்ரேனிய ராணுவவீரர்கள் போராடி உயிர்நீத்த தனிப்பட்ட சம்பவங்களும் கவனம் பெற்று வருகின்றன.
ரஷ்ய ராணுவத்தின் டாங்குகள் உக்ரேனுக்குள் நுழைவதைத் தடுக்க, கிரைமியாவை உக்ரேனின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் பாலத்தை வெடிவைத்து தகர்க்க முன்வந்தார் உக்ரேனிய ராணுவ வீரர் ஒருவர். ஆனால் வெடிகுண்டு வெடிப்பதற்குள் பாலத்திலிருந்து தப்பிக்க முடியாமல் அவர் உயிர் இழந்தார்.
கடற்படை பொறியியல் நிபுணரான விட்டலி ஸ்காக்குன் வொலோடிமிரோசிவ் செய்த அந்த உயிர்த் தியாகத்தால் ரஷ்யப் படைகள் உக்ரேனுக்குள் நுழைவது தள்ளிப் போனது.

